அமெரிக்கா - ஈரான் இடையே பாகிஸ்தானில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணிக்கும் அனைத்து கப்பல்களையும் தடுக்கப் போவதாக அமெரிக்க அதிபர் ட்ரமப் எச்சரித்துள்ளார். இந்த நிலையில், ட்ரம்ப்பிற்கு பதிலளிக்கும் விதமாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், ஒரு கணித ஃபார்முலாவை பதிவிட்டுள்ளார். அவரது பதிவு குறித்து இப்போது பார்க்கலாம்.

காலிபாஃப்பின் பதிவு என்ன.?

ட்ரம்ப்பின் எச்சரிக்கையை கிண்டல் செய்யும் விதமாக காலிபாஃப் போட்டுள்ள பதிவில், அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிவாயு விலைகளை வெள்ளை மாளிகைக்கு நினைவூட்டியுள்ளார். வெள்ளை மாளிகைக்கு அருகிலுள்ள தற்போதைய பெட்ரோல் விலைகளின் படத்தை பகிர்ந்துள்ள அவர், அமெரிக்கர்கள் விரைவில் 'அவற்றைத் தவறவிடுவார்கள்' என்று எச்சரித்தார்.

அவரது பதிவில், "தற்போதைய பெட்ரோல் விலை நிலவரத்தை அனுபவித்து மகிழுங்கள். தடை' என்று சொல்லப்படுவதால், விரைவில் நீங்கள் 4-5 டாலர் பெட்ரோல் விலைக்காக ஏங்குவீர்கள்." என்று தெரிவித்துள்ளார். மேலும், எதிர்கால விலை உயர்வுகளை பற்றி அமெரிக்க நுகர்வோரை எச்சரிக்கும் வகையில், அவர் "ΔO_BSOH>0 ⇒ f(f(O))>f(O)" என்ற சமன்பாட்டையும், அமெரிக்க எரிவாயு விலைகளை காட்டும் கூகுள் மேப்ஸின் ஸ்கிரீன்ஷாட் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டால், கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, பெட்ரோல், டீசல் விலைகள் உயரும் என்பதை சுட்டுக்காட்டும் விதமாகவே காலிபாஃப் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை என்ன.?

முன்னதாக, நேற்று தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் பதிவிட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பேச்சுவார்த்தை நன்றாக நடந்தது, பெரும்பாலான விஷயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால், உண்மையில் மிக முக்கிய விஷயமான அணு ஆயுதம் மட்டும்  ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனவும், அதனால், உடனடியாக அமலுக்கு வரும் வகையில், உலகின் தலைசிறந்த அமெரிக்கக் கடற்படை, ஹார்முஸ் ஜலசந்திக்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ முயற்சிக்கும் அனைத்து கப்பல்களையும் முற்றுகையிடும் செயல்முறையை தொடங்கும்“ என்று எச்சரித்திருந்தார்.

மேலும், ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகள் இருப்பது குறித்தும் சந்தேகமாக கூறியிருந்த அவர், அந்த கண்ணிவெடிகள் யாருக்குமே தெரியாது, அவர்களுக்கு மட்டுமே தெரியும் என்றும், அவர்கள் வெறுமனே அப்படி கூறி, அனைவரையும் மிரட்டுவதாகவும் கூறியிருந்தார். அமெரிக்கா ஒருபோதும் மிரட்டலுக்கு பணியாது என்றும், சர்வதேச கடல் பகுதியில் ஈரானுக்கு சுங்கக் கட்டணம் செலுத்தி பயணிக்கும் ஒவ்வொரு கப்பலையும் தேடிப்பிடித்து இடைமறிக்குமாறும் நமது கடற்படைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என்றும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

அதோடு, ஈரானியர்கள் ஜலசந்தியில் பதித்த கண்ணிவெடிகளை அழிக்கும் பணியையும் நாம் தொடங்குவோம். எங்கள் மீதோ அல்லது அமைதியான கப்பல்கள் மீதோ துப்பாக்கிச் சூடு நடத்தும் எந்தவொரு ஈரானியரும் நரகத்திற்கு தகர்க்கப்படுவார்கள்! என்றும் ட்ரம்ப் கூறியிருந்தார்.

மேலும், சட்டவிரோத மிரட்டிப் பறிக்கும் செயலால் ஈரான் லாபம் ஈட்ட அனுமதிக்கப்படாது என்றும், அவர்களுக்கு பணம் வேண்டும், அதைவிட முக்கியமாக, அவர்களுக்கு அணு ஆயுதம் வேண்டும். மேலும், ஒரு பொருத்தமான தருணத்தில், ஈரானில் எஞ்சியிருக்கும் கொஞ்சத்தையும் எங்கள் ராணுவம் முடித்துவிடும்!“ என்று தனது பதிவில் ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.

இந்த பதிவிற்குத் தான் இப்போது காலிபாஃப் பதிலளித்துள்ளார். இதற்கு ட்ரம்ப் என்ன பதில் கொடுக்கப் போகிறார் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.