ரஷ்யா, சீனா, இந்தியா தலையிட்டு இருந்தால், ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி 2026 சட்டமன்ற தேர்தல் 234 தொகுதிகளிலும் தேர்தல் பரப்புரை பயணம் மற்றும் வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் நடைபெற இருந்ததையொட்டி திருப்பத்தூர் மாவட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகை புரிந்திருந்தார்.
ஆங்கிலம் கட்டாயம் படிப்போம்
அப்போது தனியார் ஓட்டலில் தங்கி இருந்த சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், “அப்போது தமிழகத்தில் உள்ள தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. ஆகிய 3 கட்சிகளும் பெரியார்தான் எங்கள் கொள்கை. அவர் தான் எங்களுக்கு எல்லாம் என கூறுவார்கள். நாங்கள் எங்கள் இனத்தின் முன்னோர்களை தான் பெரியார் எனக்கூறுகிறோம். அவர்கள் திராவிடர்கள் எனக்கூறுவார்கள். நாங்கள் தமிழர்கள் எனக்கூறுவோம். அவர்கள் இருமொழி கொள்கை என்பார்கள். நாங்கள் ஒரே மொழி கொள்கை தான் அது தமிழ்.
ஆங்கிலம் எங்களுக்கு ஒரு பாடம் மட்டும் தான். ஆங்கிலத்தை கட்டாயம் படிப்போம். தமிழ் தான் எங்கள் பயிற்று மொழி. வாக்குக்கு பணம் கொடுக்கும் இடத்தில் தான் ஊழல், லஞ்சத்தின் விதை ஊன்றப்படுகிறது. அதனால் சேவை, ஜனநாயகம் இறந்து, பிணநாயகம் ஏற்படும். தமிழகத்தில் இருமுனை போட்டி அவர்கள் இலவசம் என்பார்கள். இலவசங்கள் கொடுத்த வெனிசுலா நாடு உழைப்பில் இருந்து மக்களை வெளியேற்றி, நாட்டை மோசமாக்கிவிட்டது.
அதேபோல் தமிழகத்தை மாற்ற முயற்சி செய்கின்றனர். ஒரு நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல நினைப்பவன் இதேபோல் சிந்திக்க மாட்டான். போக்குவரத்து துறைக்கு ரூ.1 லட்சம் கோடி, மின்சாரத்துறைக்கு ரூ.1.50 லட்சம் கோடி கடன் உள்ளது. கல்வி, மருத்துவம், போக்குவரத்தின் தரத்தை உயர்த்த முடியவில்லை. மின்சாரத்தை உற்பத்தி செய்யாமல், மற்றவர்களிடம் வாங்கி கொடுக்கிறார்கள்.
இதனால் கட்டணங்கள், வரிகளை உயர்த்துகிறார்கள். இது எப்படிபட்ட ஆட்சி, நாங்கள் ஆள்மாற்றம், ஆட்சி மாற்றத்திற்கு வரவில்லை. அடிப்படை, ஆட்சி முறையை மாற்ற வந்துள்ளோம். தமிழகத்தில் 4 முனை போட்டி என்பது சும்மா, அவர்கள் 3 பேரும் ஒரு முனையிலும், நான் ஒருமுனையிலும் உள்ளேன். இது இருமுனை போட்டி தான்.
கல்வி இலவசம்
கல்வியை நான் இலவசமாக தருவேன். தமிழகத்தில் உள்ள ஒரு மாவட்டம் அளவில் உள்ள பின்லாந்து கல்வி தரத்தில் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு நாம் வெட்கி தலைகுணிய வேண்டும். கேரளா, டெல்வி கல்வி தரத்தை உயர்த்தி உள்ளது. மருத்துவம் தரமாக இலவசமாக இருக்க வேண்டும். சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வந்தால் சிறப்பான மருத்துவம் கிடைக்கும் என்ற நிலையை நான் கொண்டு வருவேன்.
தூயகுடிநீரை மக்களுக்கு கொடுக்க வேண்டும். இதனை நான் இலவசமாக தருகிறேன். தற்சார்பு நிலை வாழ்க்கையை கொடுப்பது தான் சிறந்த ஆட்சி முறை. ரஷ்யா, சீனா, இந்தியா தலையிட்டு இருந்தால், ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம். அனு ஆயுதம் வைத்திருந்தால் அதனை ஈரான் பயன்படுத்தி இருக்கும். வள வேட்டைக்காக இதனை அமெரிக்கா செய்கிறது.
அனைத்து நாடுகளும் அமெரிக்காவிடம் கடன் வாங்கி உள்ளது. அதனால் அமைதி காக்கின்றனர். ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவது குறித்து அமெரிக்கா கூறுகிறது. என் நாட்டு நிர்வாகத்தில் தலையிட நீ யார் என கேட்க முடியவில்லை. காங்கிரசுக்கு கூடுதல் சீட்டு கொடுத்தது தேவையில்லாதது. அதனை தேவையில்லாமல் தி.மு.க. சுமக்கிறது. ஒரு சொட்டு தண்ணீர் தர முடியாது என கர்நாடகாவில் இருந்து காங்கிரஸ் கூறுகின்றனர்.
திரை கவர்ச்சியாளன் நான் இல்லை
கச்சத்தீவு, கல்வியை மாநில உரிமையில் இருந்து எடுத்து சென்றது, காவிரி உரிமையை பறித்தது, ஜி.எஸ்.டி., நீட் என பல்வேறு நாசக்கார திட்டங்களை கொண்டு வந்தது காங்கிரஸ். நமது நாடுபடும் அனைத்து துன்பத்திற்கும் காங்கிரஸ்தான் காரணம். களத்தில் பணியாற்றக்கூடியது கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் தான். இது அவர்கள் கட்சி பிரச்சினை. என் முன்னாடி நிற்பவர்கள், எனக்கு வாக்கு செலுத்துபவர்கள் பொழுதுபோக்கு தளத்தில் தனக்கான தலைவனை தேடுபவர்கள் இல்லை. போராட்ட களத்தில் தனக்கான தலைவரை தேடுபவர்கள். காற்று அடித்தால் எல்லா திசையிலும் பறந்து போகும் பதர்கள் இல்லை எனக்கு வாக்கு அளிப்பவர்கள். புயலே அடித்தாலும் கொள்கைக்காக நின்ற இடத்திலேயே நிற்கும் நெல்மணிகள் எனக்கு வாக்களிப்பவர்கள். திரை கவர்ச்சியாளன் நான் இல்லை. கவர்ச்சி திட்டத்தை அறிவிப்பன் நான் இல்லை” என கூறினார்.
