தமிழ்நாட்டில் இருந்து யுபிஎஸ்சி தேர்வெழுதித் தேர்ச்சி பெற்று, கர்நாடகாவில் பணியாற்றிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நேரெதிர் துருவங்களில் நின்று 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். யார் இவர்கள்? பார்க்கலாம்.


கர்நாடகாவில் பணியாற்றிய தமிழ் ஐஏஎஸ் அதிகாரி என்றாலே நிறையப் பேருக்குத் தெரியும். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரக் காரணமான சசிகாந்த் செந்தில்தான் அவர்.


யார் இந்த சசிகாந்த் செந்தில்?


திருவள்ளூரைச் சொந்த ஊராகக் கொண்ட சசிகாந்துக்கு இப்போது 45 வயதாகிறது.பொறியியல் படித்து முடித்தவர், யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகி ஐஏஎஸ் அதிகாரியாகத் தேர்ச்சி பெற்றார்.


2009ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியாகக் கர்நாடகாவில் பொறுப்பேற்றார். கர்நாடகாவில் 10 ஆண்டுகள் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தவர், சித்ரதுர்கா, ராய்ச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆட்சியராகப் பணியாற்றியுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு, பாஜக அரசின் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து, ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்து, சமூக வலைதள ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினார். 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து 2023 கர்நாடக பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸுக்காகத் தீவிரமாகப் பணியாற்றினார்.


சென்ட்ரல் வார் ரூம் தலைவர்


கர்நாடகாவில் ஹிஜாப் தடை விவகாரம், ஊழல் விவகாரம், முஸ்லிம்களுக்கான 4 சதவீத உள் ஒதுக்கீடு ரத்து எனப் பல விவகாரங்களைக் கையில் எடுத்துக் களமாடினார். 40 பர்சென்ட் கமிஷன் என்ற பிரச்சாரத்தைக் கையில் எடுத்து, வைரலாக்கிய சசிகாந்த் செந்தில், கர்நாடகாவில் காங்கிரஸ் வெல்ல வழிவகுத்தார். காங்கிரஸ் கட்சியின் ‘சென்ட்ரல் வார் ரூம்’ தலைவராகவும் சசிகாந்த் பணியாற்றி வருகிறார். சாந்தமாகவும் பொறுமையாகவும் அதேநேரம் தெளிவாகவும் பேசுவது இவரின் பாணி அரசியல்.



பலம், பலவீனம்


இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக சசிகாந்த் செந்தில் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செல்வப்பெருந்தகை தலைவரானார். இப்போது திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார் சசிகாந்த். சிட்டிங் எம்.பி. ஜெயக்குமார் மீது அதிருப்தி நிலவுவது அவருக்கு பலம் என்றால் தொகுதியில் அதிகம் அறியப்படாத முகமாக இருப்பது சசிகாந்த் செந்திலின் பலவீனம்.


அண்ணாமலை


கர்நாடக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்று கூறினாலே எல்லோருக்கும் அது அண்ணாமலைதான் என்று எல்லோருக்கும் தெரியும். 2011ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக கர்நாடகாவில் பொறுப்பேற்றார். அதிரடி ஐபிஎஸ் அதிகாரியாக முகம் காட்டியவர், 2019ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார்.


பாஜக மாநிலத் தலைவர் பொறுப்புடன் தமிழ்நாட்டில் நேரடி அரசியலுக்குள் கால் பதித்த அண்ணாமலை, ஆக்ரோஷ அரசியல் தலைவராக மாறினார். எனினும் 2021 தமிழக பேரவைத் தேர்தலில், கரூர், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை, தோல்வியையே தழுவினார். ஆனாலும் தமிழ்நாட்டில் பாஜகவை வளர்த்து வருவதாகக் கூறி வருகிறார்.






கோவை தொகுதியில் போட்டி


தற்போது 2024 மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடுகிறார். ஒப்பீட்டளவில் கோவை நகரம், பாஜக ஆதரவு உள்ள தொகுதி என்பதும் மாநிலத் தலைவரே நேரடியாக நட்சத்திர வேட்பாளராகப் போட்டியிடுவதும் அண்ணாமலையின் பலங்கள். அதிமுக தனித்துக் களம் காண்பதால், திமுக எதிர்ப்பு வாக்குகள் பிரியும் என்பதும் பாஜக எதிர்ப்பு மனநிலை கொண்ட இஸ்லாமியர்கள் கோவையில் வசிப்பதும் பலவீனங்கள்.


இந்த சூழலில் ஒரே ஆண்டில் ஆட்சிப் பணியில் இருந்து ராஜினாமா செய்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளான சசிகாந்த் செந்தில், அண்ணாமலை ஆகிய இருவரும், ஒரே ஆண்டில் அதிகாரப் பணிக்காக நாடாளுமன்றத்தில் காலடி எடுத்து வைப்பார்களா? இதற்குக் காலமும் மக்களும்தான் பதில் சொல்ல வேண்டும்.