தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புத்திர கவுண்டம்பாளையத்தில் உள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வலது கரமாக செயல்பட்டு வந்த சேலம் அதிமுகவின் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், மாநில கூட்டுறவு வங்கி தலைவருமான இளங்கோவன் வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளதாக பறக்கும்படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, இன்று அவரது வீட்டிலும், தோட்டத்தில் உள்ள வீட்டிலும் தேர்தல் பறக்கும் படையினர் முருகையன் தலைமையிலான குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கணக்கில் வராத 50,000 பணத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிமுக ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் சித்ரா, ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கர், மற்றும் அதிமுக நிர்வாகிகளள் திரண்டதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் இளங்கோவன் சேலம் மாநகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வதற்காக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடன் சேலம் மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களுக்கு நேரடியாகச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இதற்கு முன்னர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதற்காக இளங்கோவன் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பல்வேறு ஆலோசனை கூட்டங்களை நடத்தி சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளில் 10 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுகவை வெற்றி பெறச் செய்தார். சில நாட்களுக்கு முன்பு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இளங்கோவன் மற்றும் அவரது மகன் உட்பட உறவினர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அன்று 12 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் எந்தவிதமான ஆவணங்களும் கைப்பற்றப் படவில்லை.
நேற்று, சேலம் மாநகராட்சியில் 58 வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பாண்டியன் என்பவர் திமுக வேட்பாளரின் சகோதரரே தாக்கியதாக மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அன்னதானப்பட்டி காவல் துறையினர் கைது செய்தனர். இதையறிந்த அதிமுகவினர் வேட்பாளரை விடுவிக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட அதிமுக வேட்பாளர் பாண்டியன் நெஞ்சுவலி காரணமாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இன்று காலை நிபந்தனை ஜாமீனில் பாண்டியன் விடுதலை செய்யப்பட்டார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளதால் இறுதி கட்டத்தில் அதிமுகவினர் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளால் சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.