Modi On Gandhi: திரைப்படம் மூலமாக தான் மகாத்மா காந்தி பற்றி சர்வதேச மக்கள் தெரிந்து கொண்டதாக, மோடி பேசியதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


காந்தி பற்றி பேசிய மோடி:


தேசத் தந்தையைப் பற்றிய திரைப்படம் எடுக்கப்படுவதற்கு முன்பு வரை,  உலக அளவில் மகாத்மா காந்தியைப் பற்றி யாருக்கும் தெரியாது என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. தொலைக்காட்சி நேரலை ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை புறக்கணித்ததாகவும், காந்தியின் பாரம்பரியத்தை மேம்படுத்தவில்லை என்றும், தனக்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்களை  குற்றம் சாட்டினார்.


படத்தால் காந்தியை பற்றி அறிந்த உலகம் - மோடி


அதன்படி,மகாத்மா காந்தி உலகின் உன்னத ஆத்மா. இந்த 75 வருடங்களில் உலக மக்கள் காந்தியைப் பற்றி அறிந்திருக்க வேண்டியது நமது பொறுப்பு அல்லவா? அவரைப் பற்றி யாருமே அறிந்திருக்கவில்லை.  காந்தி தொடர்பான படம் உருவானபோது தான், ​​முதன்முறையாக அவரைப் பற்றி அறிந்துகொள்ள உலகில் அளவில் ஆர்வம் ஏற்பட்டது.  மார்ட்டின் லூதர் கிங், தென்னாப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலா பற்றி உலகம் அறிந்திருக்கிறது.  அவர்களை விட எந்த வகையிலும் காந்தி குறைந்தவர் அல்ல. உலகம் முழுவதும் பயணம் செய்த பிறகு நான் இதைச் சொல்கிறேன். காந்தி மற்றும் அவர் காரணமாக, இந்தியா அந்நியச் செலாவணியைப் பெற்றிருக்க வேண்டும். இன்று, காந்தி பல உலகளாவிய பிரச்னைகளுக்கு தீர்வின் ஒரு பகுதியாக இருக்கிறார், ஆனால் நாம் அதை செய்யவில்லை. நாம் நிறைய இழந்துவிட்டோம்” என மோடி பேசியுள்ளார்.


ராகுல் காந்தி ஆவேசம்:


மோடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ராகுல் காந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”மகாத்மா காந்தி உலகம் முழுவதும் இருளுக்கு எதிராகப் போராடும் வலிமையைக் கொடுத்த சூரியன் ஆவார். உண்மை மற்றும் அகிம்சையின் வடிவில், அநீதிக்கு எதிராக வலிமையற்ற மனிதனுக்குக் கூட தைரியத்தைத் தரும் பாதையை பாபு உலகுக்குக் காட்டினார்.  ஆர்எஸ்எஸ் கருத்துகளால் உலகை பார்க்கும் நபர்களால் காந்திஜியைப் புரிந்து கொள்ள முடியாது. அவர்களால் (நாதுராம்) கோட்சேவைப் புரிந்து கொள்ள முடியும் மற்றும் கோட்சே காட்டிய பாதையைப் பின்பற்ற முடியும். காந்திஜி உலகம் முழுவதற்கும் ஒரு உத்வேகமாக இருந்தார். மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், நெல்சன் மண்டேலா, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆகியோருக்கு அனைவரும் காந்தியால் ஈர்க்கப்பட்டவர்கள்” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.


கார்கே கண்டனம்:


காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “நாதுராம் கோட்சேவுடன் இணைந்து மகாத்மா காந்தியின் படுகொலையில் ஈடுபட்ட சித்தாந்த மூதாதையர்களால், பாபு வழங்கிய சத்தியப் பாதையை ஒருபோதும் பின்பற்ற முடியாது. இப்போது பொய் அதன் பையை எடுத்துக்கொண்டு கிளம்பப் போகிறது” என தெரிவித்துள்ளார்.


சீதாராம் யெச்சூரி சாடல்:


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சீதாராம் யெச்சூரி பேசுகையில், “1982 ஆம் ஆண்டு வெளியான காந்தி திரைப்படத்திற்குப் பிறகுதான் மகாத்மா காந்தியைப் பற்றி உலகம் அறிந்தது என்று பிரதமர் மோடி கூறியது அதிர்ச்சியளிக்கிறது. தேசப்பிதா, காந்தி தனது ஒப்பற்ற பாரம்பரியத்தை அமைதி மற்றும் அகிம்சையின் அடையாளமாக ஊக்குவிக்க யாரும் தேவையில்லை! மோடி பிறப்பதற்கு முன் காந்தி ஐந்து முறை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார்! பாக்ஸ் பிரிட்டானிக்காவின் கீழ் இந்தியா ஒரு காலனியாக இருந்ததால் அவருக்கு ஒருபோதும் விருது வழங்கப்படவில்லை” என தெரிவித்துள்ளார்.


திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு:


திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சகாரிகா கோஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ரிச்சர்ட் அட்டன்பரோ படம் எடுக்கும் வரை மகாத்மா காந்தியைப் பற்றி யாருக்கும் தெரியாது என்று மோடி கூறுகிறார். ஆச்சரியப்படுவதற்கில்லை. நாதுராம் கோட்சே மீது பற்று கொண்டவர்களுக்கு இயல்பாகவே காந்தியைப் பற்றி எதுவும் தெரியாது” என தெரிவித்துள்ளார்.


காந்தி திரைப்படம்:


1982 ஆம் ஆண்டு ரிச்சர்ட் அட்டன்பரோ, காந்தியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தார். சர்வதேச அங்கீகாரம் பெற்ற இந்த படம், 1983 இல் எட்டு அகாடமி விருதுகளை வென்றது, இதில் காந்தியை திரையில் சித்தரித்த பென் கிங்ஸ்லி சிறந்த நடிகர் மற்றும் அட்டன்பரோவிற்கு சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படம் உள்ளிட்ட விருதுகள் கிடைத்தன. இப்படம் ஐந்து பாஃப்டா விருதுகளையும் வென்றது.


ஆனால், அமெரிக்க சிவில் உரிமை போராட்டத்திற்காக போராடி 1968ல் கொல்லப்பட்ட மார்டின் லூதர் கிங், 1952ல் தனது போராட்டத்தைத் தொடங்கிய தென்னாப்பிரிக்காவின் நிறவெறி எதிர்ப்புப் போராளியும் நெல்சன் மண்டேலா ஆகியோரும்,  காந்தியையே தங்கள் உத்வேகமாகப் பகிரங்கமாக அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.