பீகாரில் ஆட்சிக்கு வந்தால் மகரசங்கராந்தி அன்று பெண்களுக்கு ரூ.30,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் அறிவித்தார். இந்தத் திட்டம் ஜனவரி 14 ஆம் தேதி செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.

Continues below advertisement


பீகாரில் வரும் நவம்வர் 6 மற்றும் 11-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் இறுதி நாளில் வாக்காளர்களிடம் உரையாற்றிய தேஜஸ்வி யாதவ், ஆட்சிக்கு வந்தால் தனது கட்சி செயல்படுத்த திட்டமிட்டுள்ள முக்கிய நலத்திட்ட நடவடிக்கைகளையும் குறிப்பிட்டார்.


பழைய ஓய்வூதிய திட்டம்


அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசாங்கம் மீண்டும் கொண்டுவரும் என்றும், காவல்துறையினர் உட்பட அனைத்து அரசு ஊழியர்களும் அவர்களின் சொந்த மாவட்டங்களிலிருந்து 70 கிலோமீட்டருக்குள் பணியமர்த்தப்படுவதை உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார். விவசாயிகளைப் பொறுத்தவரை, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை விட குவிண்டாலுக்கு ரூ.300 கூடுதலாகவும், கோதுமைக்கான எம்எஸ்பியை விட குவிண்டாலுக்கு ரூ.400 போனஸாகவும் வழங்குவதாக உறுதியளித்தார்.



பெண்களுக்கு ரூ.30000 உதவித் தொகை


பீகாரில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் பெண்கள் ஆதரவு மிக முக்கியமானதாக இருக்கும் என்ற அவர், “நாங்கள் எங்கள் அரசாங்கத்தை அமைப்போம், அது நடந்தவுடன், மகர சங்கராந்தி அன்று, மை-பஹின் மான் யோஜனா செயல்படுத்தப்படும். இந்தத் திட்டம் ஜனவரி 14 ஆம் தேதி மகரசங்கராந்தி அன்று செயல்படுத்தப்படும் என்றும், இதன் கீழ் பெண்கள் தலா ரூ.30,000 பெறுவார்கள் என்று அவர் கூறினார்.


எதிர்க்கட்சிகள் கடந்த வாரம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், டிசம்பர் 1 முதல் பெண்களுக்கு மாதத்திற்கு ரூ.2,500 நிதி உதவி வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.30,000 வழங்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், மகர சங்கராந்தி அன்று முழுத் தொகையையும் மாற்றுவதாக தேஜஸ்வி குறிப்பிட்டுள்ளார்.


வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை


ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் பீகாரில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்தது ஒரு அரசு வேலை கிடைக்கும் என்று முன்னதாக உறுதியளித்திருந்தார். பீகாரில் அரசாங்கம் அமைக்கப்பட்டவுடன், 20 மாதங்களுக்குள், அரசு வேலை இல்லாத ஒரு குடும்பமே இருக்காது என்று  தேஜஸ்வி கூறினார்.


பதவியேற்ற பிறகு தனது முதல் செயல் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த திட்டத்தில் கையெழுத்திடுவதாக இருக்கும் என்றும் அவர் கூறினார். இது தொடர்ச்சியான முக்கிய அறிவிப்புகளின் தொடக்கம் மட்டுமே என்று கூறிய தேஜஸ்வி, "இது முதல் அறிவிப்பு, இறுதி அறிவிப்பு அல்ல" என்றார்.