உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான மக்களவைத் தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. 6 மணிக்கு முடிகிறது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட மொத்தம் 101 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.


அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சொந்த ஊரான அரவக்குறிச்சியில் பாஜக மாநிலத் தலைவரும் கோவை தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலை வாக்கைப் பதிவு செய்தார்.


கணவனுக்கு ஒரு பூத், மனைவிக்கு ஒரு பூத்


தொடர்ந்து கோவை ராம்நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை பேட்டி அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:


‘’ மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடந்து கொண்டிருக்கிறது. கோவையில் 1 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இல்லை. கணவனுக்கு ஒரு பூத், மனைவிக்கு ஒரு பூத் என போட்டிருக்கிறார்கள்.


எப்படி இப்படிப்பட்ட வாக்காளர் பட்டியலைத் தயார் செய்தார்கள்?


கவுண்டம்பாளையம் பகுதியில் ஒரே பூத்தில் 830 பேரின் பெயர்களை நீக்கியுள்ளார்கள். இது எல்லாத் தேர்தலிலும் நடப்பதுதான்.‌ ஆனால் இந்த முறை அதிகமாக உள்ளது. தேர்தல் ஆணையம் என்ன வேலை செய்துள்ளது? பல நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு வாக்கு மறுக்கப்பட்டுள்ளது. எப்படி இப்படிப்பட்ட வாக்காளர் பட்டியலைத் தயார் செய்தார்கள்? இந்த பகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும்.


வாக்குச் சாவடிகளில் முறையாக போக்குவரத்து, அடிப்படை வசதிகள் இல்லை. இது குறித்து புகார் அளித்தும் தேர்தல் அதிகாரியிடம் சரியான பதில் இல்லை. ஒவ்வொரு பூத்திற்கும் 20 பெயர்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதில் அரசியல் இருக்கிறதா என சந்தேகம் வருகிறது. வாக்காளர் பட்டியலை நேர்மையான முறையில் தயார் செய்ய வேண்டும்.


தேர்தல் அதிகாரியிடம் இதுகுறித்துப் புகார்


எல்லா இடங்களிலும் பூத் சிலிப் தரவில்லை. தேர்தல் அதிகாரியிடம் இதுகுறித்துப் புகார் அளித்து வருகிறோம். வாக்காளர் பட்டியல் தயார் செய்ய தனி கவனம் செலுத்த வேண்டும். ஜனநாயகம் நன்றாக இருக்க இதை எல்லாம் பார்க்க வேண்டும். வாக்கு மறுக்கப்பட்டவர்கள் சண்டையிடுவதால் தேர்தல் வாக்குப் பதிவுக்குத் தாமதம் ஆகிறது. மக்கள் அதிகமாக ஓட்டு போட வர வேண்டும்'’.


இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.