Rajya Sabha Election: மாநிலங்களவையில் காலியாக உள்ள 15 உறுப்பினர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது.


மாநிலங்களவை தேர்தல்:


மாநிலங்களவையில் காலியாக உள்ள 56 உறுப்பினர் இடங்களுக்கு, ஏற்கனவே  41 தலைவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பாஜக தலைவர் ஜேபி நட்டா, அசோக் சவான் மற்றும் மத்திய அமைச்சர்கள் அஷ்வினி வைஷ்ணவ், எல் முருகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில்,  உத்தரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் சார்பிலான 15 மாநிலங்களவை தொகுதிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி, இரவுக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும். 


உத்தரபிரதேசத்தில் 10 உறுப்பினர்கள்:


உத்தரப் பிரதேசத்தில் 10 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு,  பாஜக 8 வேட்பாளர்களையும், எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி 3 வேட்பாளர்களையும் நிறுத்தியுள்ளது. அதாவது ஒரு இடத்திற்கு  கடும் போட்டி அமைந்துள்ளது. வேட்பாளர் எத்தனை முதல் விருப்பு வாக்குகளைப் பெறுவார் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வேட்பாளர் மாநிலங்களவை உறுப்பினராக குறைந்தபட்சம் 37 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த 10 எம்.எல்.ஏக்கள் தங்களுடன் இருப்பதாக பாஜக தரப்பு தெரிவித்துள்ளது. இதனால், சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏக்கள் எதிர்தரப்பிற்கு ஆதரவாக வாக்களிப்பார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், இதனை அந்த கட்சி தலைமை முற்றிலும் மறுத்துள்ளது.


வேட்பாளர்கள் யார்? 


உத்தரபிரதேசத்தில் பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்பிஎன் சிங், முன்னாள் எம்பி சவுத்ரி தேஜ்வீர் சிங், மாநில மூத்த தலைவர் அமர்பால் மவுரியா, முன்னாள் அமைச்சர் சங்கீதா பல்வந்த் (பிண்ட்), கட்சியின் செய்தி தொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி, முன்னாள் எம்எல்ஏ சாதனா சிங், முன்னாள் ஆக்ரா மேயர் நவீன் ஜெயின் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் உறுப்பினர் மற்றும் தொழிலதிபர்  சஞ்சய் சேத் ஆகியோரை வேட்பாளர்களாக களமிறக்கியுள்ளது. அதேநேரம், சமாஜ்வாதி தரப்பில், நடிகரும் எம்பியுமான ஜெயா பச்சன், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அலோக் ரஞ்சன் மற்றும் தலித் தலைவர் ராம்ஜி லால் சுமன் ஆகியோரை களமிறக்கியுள்ளது. 


கர்நாடகாவில் மாநிலங்களவை தேர்தல்:


மாநிலங்களவையில் காலியாக உள்ள 4 இடங்களை நிரப்புவதற்காக கர்நாடகாவிலும் இன்று தேர்தல் நடைபெற உள்ளது. கட்சி மாறி வாக்களிப்பதை தவிர்க்க காங்கிரஸ் கட்சி தனது எம்.எல்.ஏக்களை தனியார் ஓட்டலில் தங்க வைத்துள்ளது. காங்கிரஸ், பாஜக மற்றும் ஜேடி(எஸ்) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 5 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். குறிப்பாக பாஜக-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி இரண்டாவது வேட்பாளரை நிறுத்தியிருப்பது தேர்தலில் பரபரப்பை கூட்டியுள்ளது.


இமாச்சலபிரதேச மாநிலங்களவை தேர்தல்:


இமாச்சலப் பிரதேசத்தில், காங்கிரஸ் வேட்பாளர் அபிஷேக் மனு சிங்விக்கு வாக்களிக்கக் கோரி காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு அழுத்தம் கொடுத்ததாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள அக்கட்சியின் வேட்பாளர் ஹர்ஷ் மகாஜன், இதுபோன்ற செயல்கள் ஜனநாயக செயல்முறையை பாதிப்பதாக கூறியுள்ளார். காங்கிரசுக்கு பெரும்பான்மை இருந்தும், பாஜக வேட்பாளரை நிறுத்தி இருப்பது தேர்தல் களத்தை சூடேற்றியுள்ளது.