மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, வயநாட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அப்போது அவர், இந்தத் தேர்தல் இந்தியாவின் ஆன்மாவுக்கான போராட்டம் என்று தெரிவித்துள்ளார். 


நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் களைகட்டி வருகிறது. ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. 


கேரளாவில், ஏப்ரல் 26-ல் தேர்தல்


இதற்கிடையே அண்டை மாநிலமான கேரளாவில், ஏப்ரல் 26ஆம் தேதி அன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.


இதுகுறித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இவர், வயநாடு என்னுடைய வீடு. வயநாடு மக்கள் எனது குடும்பத்தினர். அவர்களிடம் இருந்து கடந்த  5 ஆண்டுகளில் ஏராளமான அன்பையும் அக்கறையையும் பெற்றுள்ளேன். 


2024 ஆம் ஆண்டுக்கான மக்களவைக்கு மீண்டும் ஒரு முறை இந்த அழகிய பூமியில் இருந்து வேட்புமனுத் தாக்கல் செய்வதில் மிகுந்த பெருமை அடைகிறேன்.


இந்தத் தேர்தல் இந்தியாவின் ஆன்மாவுக்கான போராட்டம். பாரத மாதாவின் குரலை நசுக்க முயலும் வெறுப்பு, ஊழல், அநீதி போன்ற சக்திகளிடம் இருந்து நமது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டம் இது.


 






இந்தியாவின் ஒவ்வொரு உறுப்பினரோடு இணைந்து நானும், இந்தப் போராட்டத்தில் வெற்றி பெறும்வரை ஓய மாட்டோம். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையும், மணிப்பூரில் இருந்து மும்பை வரையும் நம் மாநிலங்களின் ஒன்றியத்தை பலப்படுத்த ஒவ்வொரு குடிமகனையும் ஒன்றிணைப்போம்'' என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 


கடந்த முறை அமேதி மற்றும் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, அமேதி தொகுதியில் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.