வருகின்ற 19ம் தேதி நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் உள்ள 811 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் சமூக வலைதளங்களிலும், வீடு வீடாக சென்றும் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை உள்ளாட்சி தேர்தல் களத்தில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஆனந்த் சிங் என்பவர் களமிறங்கி இருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் சிங். டோனி சிங் என அழைக்கப்படும் இவர், பஞ்சாப் மாநிலத்தை பூர்விமாக கொண்டவர். இவர் பாப்பநாய்க்கன்பாளையம் பகுதியில் எலக்ட்ரானிஸ் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். 2017 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டங்களில் பங்கேடுத்து, கவனத்தை ஈர்த்தவர். பின்னர் ஆண்டுதோறும் கோவையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதிலும் முக்கியப் பங்காற்றி வருகிறார். இதேபோல கொரோனா ஊரடங்கு காலத்திலும் பல்வேறு சேவைகளை செய்துள்ளார். இந்நிலையில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 71 வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக ஆனந்த் சிங் களமிறங்கியுள்ளார். தமிழ் மொழி மீது பற்று கொண்ட இவர், தமிழ் பாடல்களை பாடியும் அசத்துகிறார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கோவையில் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது. இதனிடையே தேர்தலில் போட்டியிடும் ஆனந்த் சிங்கிற்கு ஆதரவாக நடிகர்கள் பாக்கியராஜ், நிழல்கள் ரவி ஆகியோர் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து ஆனந்த் சிங் கூறும் போது, “என்னை பஞ்சாப் தமிழன் டோனி சிங் என்று தான் மக்கள் அழைக்கின்றனர். பஞ்சாப்பில் இருந்து வியாபாரத்திற்காக எனது தந்தை கோவைக்கு குடி பெயர்ந்தார். 4 தலைமுறையாக கோவையில் வசித்து வருகிறோம். எனது உருவம் பஞ்சாப் என்றாலும், இதயம் தமிழ் தான். எனது நண்பர்கள், வியாபார பார்ட்னர்கள் அனைவரும் தமிழர்கள் தான்.
இந்த தமிழ் மண் தான் எனக்கு சாப்பாடு, படிப்பு, அந்தஸ்து, வியாபாரம் ஆகியவற்றை கொடுத்தது. இந்த மண்ணிற்கு திரும்ப எதாவது தர வேண்டும் என மாநகராட்சி தேர்தலில் 71 வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடுகிறேன். எதோ ஒரு கட்சியில் இருந்து வெற்றி பெறுவதை விட சுயேச்சையாக வென்றால், பொது மக்களுக்கு அதிகமாக உதவ முடியும். தனி மனிதனாக செய்வதை விட, அரசின் உதவியுடன் சேவைகளை செய்வேன்.
ஆர்.எஸ்.புரம் பகுதியில் பல்வேறு அடிப்படை பிரச்சனைகள் இருக்கின்றன. சுகாதாரம், சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயல்வேன். மக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை அழைக்கலாம். உதவ தயாராக இருக்கிறேன். கோவை மக்கள் என்னை ஜெயிக்க வைப்பார்கள். நடிகர் பாக்கியராஜ் எனது பள்ளி நண்பர். நிழல்கள் ரவி எனது கல்லூரி நண்பர். இருவரும் எனக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டுள்ளனர். இருவரும் எனக்கு ஆதரவாக பரப்புரை செய்ய வரலாம். என்னை தமிழனாகவும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாகவும் நினைத்து வாக்களியுங்கள். தேர்தலில் போட்டியிட பலர் ஆதரவு அளித்து இருப்பது பெருமையாக உள்ளது. மக்களுக்கு ஒரு மாற்றம் வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
சுயேச்சையாக போட்டியிடும் ஆனந்த் சிங்கிற்கு பெட்ரமாஸ் லைட் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தீவிர பரப்புரையில் ஈடுபட்டு ஆனந்த் சிங் வாக்கு சேகரித்து வருகிறார்.