முதலமைச்சர் பதவியேற்பு நிகழ்ச்சி ராஜ்பவனுக்கு பதில் ஒரு கிராமத்தில் நடைபெறும் என்று, பஞ்சாப்பில் முதல்வராக பதவியேற்க உள்ள பகவந்த்மான் கூறினார்.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தர்காண்ட், மணிப்பூர் மற்றும் கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்நிலையில், இந்தத் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரை 117 இடங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற நிலையில், அதில் 59 இடங்களில் வெற்றி பெற்றால் ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற நிலைமை இருந்தது. ஆனால், ஆம் ஆத்மி கட்சி 89 இடங்களில் முன்னிலை வகித்து கிட்டத்தட்ட ஆட்சியை கைப்பற்றியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சரண்ஜித் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்த நிலையில், தற்போது தோல்வி அடைந்துள்ளார்.
பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வி அடைந்தார். பாதார், சாம்கவுர் சாகேப் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு ஆம் ஆத்மி வேட்பாளார்களிடம் தோல்வி அடைந்துள்ளார்.
இந்த நிலையில், பஞ்சாப்பில் இனி அரசு அலுவலகங்களில் முதல்வரின் படம் இடம்பெறாது என்றும், முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சி ராஜ்பவனுக்கு பதில் ஒரு கிராமத்தில் நடைபெறும் என்றும் பகவந்த்மான் கூறினார்.
தொண்டர்கள் மத்தியில் பகவந்த் மான் பேசுகையில், சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்கின் பூர்வீகக் கிராமமான நவன்ஷஹர் மாவட்டத்தில் உள்ள கட்கர்காலனில் தனது பதவியேற்பு விழா இன்று நடைபெறும் என்று அறிவித்தபோது, கூட்டத்தில் இருந்து ஆரவாரம் பெற்றார்.மேலும் அரசு அலுவலகங்களில் வழக்கம் போல் முதல்வரின் புகைப்படம் இருக்காது என்றும் அறிவித்தார். அவர் 58,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளிகள், சுகாதாரம், தொழில்துறை, விவசாயத்தை லாபகரமாக்குதல், பெண்களின் பாதுகாப்பு மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவை தான் பதவியேற்ற பிறகு தனது முதல் வணிகமாகும் என்றும் அவர் கூறினார்.
மேலும், எந்த அரசு அலுவலகத்திலும் முதல்வர் படம் வைக்கப்படாது, அதற்கு பதிலாக பகத்சிங் மற்றும் அம்பேத்கர் படங்கள் இருக்கும் என்றும் பகவந்த் மான் அறிவித்தார்.
ஒரு மாதத்தில் பஞ்சாபில் மாற்றத்தை நீங்கள் காணத் தொடங்குவீர்கள் என்று உறுதியளித்த அவர், மக்கள் ஒன்றிணைந்து செயல்படுமாறு வேண்டுகோள் விடுத்தார். மேலும், ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்காதவர்கள் கவலைப்படத் தேவையில்லை, ஏனெனில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் அரசாங்கம் பாடுபடும் என்றும் கூறினார்.
அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், “புரட்சிக்காக” மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.