Priyanka Gandhi: வயநாடு இடைத்தேர்தலில் நவம்பர் 13ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


வயநாடு தொகுதி இடைத்தேர்தல்:


மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலுடன், சட்டமன்ற மற்றும் மக்களவை என மொத்தம் 50 தொகுதிகளுக்கு இடைதேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக தென்னிந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியின் இடைத்தேர்தல் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த இரண்டு தேர்தல்களிலும் அந்த தொகுதியில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், அந்த தொகுதிக்கான இடைத்தேர்தலில், பிரியங்கா காந்தி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால், அந்த தொகுதி மீண்டும் நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. 


வயநாட்டில் களமிறங்கும் பிரியங்கா காந்தி:


மறைந்த பிரதமர் ராஜிவ் காந்தி மற்றும் முன்னாள் காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி. கடந்த 2019ம் ஆண்டில் தீவிர அரசியலில் நுழைந்ததிலிருந்து , அவர் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான சாத்தியமான போட்டியாளராக கருதப்பட்டார். சோனியா காந்தியின் விலகலை தொடர்ந்து, அவர் போட்டியிடும் காந்தி குடும்பத்தின் கோட்டையாக கருதப்படும் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி களம் காண்பார் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில், தனது சகோதரர் ராகுல் காந்தி போட்டியிட்ட இரண்டு முறையும் வெற்றியை பரிசாக அளித்த, வயநாடு தொகுதியின் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக பிரியங்கா காந்தி களமிறங்கியுள்ளார்.


வெற்றி உறுதியான பின் போட்டியா?


அமேதி, ரேபரேலி மற்றும் வாரணாசி நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளராகக் கருதப்பட்டவர் 52 வயதான பிரியங்கா காந்தி. இந்நிலையில் போட்டியிடுவதற்கு முன்பே கிட்டத்தட்ட வெற்றி உறுதியான, கேரள மாநிலத்தைச் சேர்ந்த வயநாடு தொகுதியின் இடைத்தேர்தல் மூலம் அவர் நேரடி அரசியலுக்குள் நுழைகிறார்.  2019 மற்றும் 2024 மக்களவை தேர்தல்களில் அதிக இடங்களில் வெற்றி பெற்று, வரலாற்று ரீதியாக கேரளாவில் காங்கிரஸ் வலுவாக செயல்பட்டு வருகிறது . இந்த சூழலில் மக்கள் பிரதிநிதி பதவிக்காக முதல்முறையாக போட்டியிடும் பிரியங்கா காந்தி, தனக்கான களமாக தென்னிந்தியாவில் உள்ள வயநாடு தொகுதியை தேர்வு செய்துள்ளார்.


வரலாறு படைப்பாரா பிரியங்கா காந்தி?


வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா வெற்றி பெற்றால், காந்தி குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பது வருவது இதுவே முதல் முறையாகும். இவரது தாயார் சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். சகோதரர் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதி மக்களவை உறுப்பினராக உள்ளார்.


ரோட் ஷோக்கு தயாராகும் காந்தி குடும்பம்:


வரும் நவம்பர் 13ம் தேதி வயநாடு தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வரும் 23ம் தேதியன்று பிரியங்கா காந்தி, வேட்புமனுதாக்கல் செய்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது, தாயார் சோனியா காந்தி மற்றும் சகோதரர் ராகுல் காந்தி ஆகியோர் உடனிருப்பார்கள் என கூறப்படுகிறது. வேட்புமனுதாக்கலை தொடர்ந்து, கல்பேட்டா பகுதியில் காந்தி குடும்பத்தினர் ரோட் ஷோவில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக, சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக சோனியா காந்தி டெல்லி வரவுள்ளார்.


வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் ஏன்?


அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், ராகுல் காந்தி வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து, இந்தி பேசும் மாநிலங்களில் கட்சியின் இருப்பை வலுப்படுத்தும் நோக்கில், ரேபரேலி தொகுதி எம்.பி., பதவியை தக்கவைத்துக் கொண்டு, வயநாடு எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியான வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என கடந்த ஜுன் மாதமே காங்கிரஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவரை எதிர்த்து பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் மற்றும் ஆளும் சிபிஎம் கட்சி சார்பில் சத்யம் மொகேரி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.