PM Modi: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில், பிரதமர் மோடி வாக்களித்து தனது ஜனநாயக கடமையை பூர்த்தி செய்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நிஷான் மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்தார்.
வாக்களித்தார் பிரதமர் மோடி..!
முன்னதாக வாக்குச்சாவடிக்கு சில நூறு மீட்டர்களுக்கு முன்பாகவே வாகனத்தை நிறுத்திவிட்டு, நடந்தே வாக்குச்சாவடிக்கு சென்றார். அவருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனிருந்தார். அவர்களை காண சாலையின் இரண்டு புறமும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் பிரதமர் மோடியின் உருவப்படம், பாஜகவின் சின்னமான தாமரை படம் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர். அந்த பதாகைகளில் சிலருக்கு பிரதமர் ஆட்டோகிராஃபும் போட்டுக் கொடுத்தார். தொடர்ந்து வாக்குச்சாவடிக்குள் சென்ற பிரதமர் மோடி, தேர்தல் அதிகாரிகளிடம் தனது ஆவணங்களை காட்டி, பிறகு வாக்களித்தார். பின்பு வெளியே வந்து பொதுமக்களை நோக்கி கையசத்தார்.
இதையொட்டி அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதற்காக நேற்றே குஜராத் சென்ற பிரதமர் மோடி, மாநிலத்தின் ஆளுநர் மாளிகையில் இரவு தங்கியிருந்தார்.
குஜராத்தில் தேர்தல்:
மூன்றாம்கட்ட வாக்குபதிவில் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த,93 மக்களவை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதில் குஜராத்தில் உள்ள 25 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முன்னதாக சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்று வெற்றி பெற்றுள்ளார்.
இதுபோக அசாமில் 4 மக்களவை தொகுதிகள், பீகாரில் 5 மக்களவை தொகுதிகள், சத்தீஸ்கரில் 7 மக்களவை தொகுதிகள், தாத்ரா & நாகர் ஹாவேலி மற்றும் டாமன் & டையூவில் 2 மக்களவை தொகுதிகள், கோவாவில் 2 மக்களவை தொகுதிகள், கர்நாடகாவில் 14 மக்களவை தொகுதிகள், மத்தியபிரதேசத்தில் 9 மக்களவை தொகுதிகள், மகாராஷ்ட்ராவில் 11 மக்களவை தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 10 மக்களவை தொகுதிகள் மற்றும் மேற்குவங்கத்தில் நான்கு மக்களவை தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு மக்களவையில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில், 283 இடங்களுக்கு வாக்குப்பதிவு நிறைவடையும். அடுத்த நான்கு கட்டங்கள் மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடைபெறும். ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.