புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இந்த கூட்டணி வரும் 7ஆம் தேதி ஆட்சி அமைக்க உள்ளது. முதலில் யார் முதல்வர் என்ற கேள்வி கூட்டணி இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் நேற்று நடைபெற்ற என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ரங்கசாமி சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் துணைநிலை ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதனால் பாஜக ஆதரவுடன் ரங்கசாமி ஆட்சி அமைக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது.  


இந்தச் சூழலில் ரங்கசாமி அமைச்சரவையில் பாஜக 3 அமைச்சர் பதவி கேட்டு நெருக்கடி தருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே ரங்கசாமி பாஜகவிற்கு 2 அமைச்சர் பதவி மற்றும் துணை சபாநாயகர் பதவி தருவதாக ஒப்பு கொண்டதாக கூறப்படுகிறது. எனினும் பாஜக எம்.எல்.ஏக்கள் நமச்சிவாயம், ஏம்பலம் குமார், ஜான் பாண்டியன் ஆகியோர் அமைச்சர் பதவியை கேட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 




மொத்தம் 30 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட புதுச்சேரியில் அதிகபட்சமாக 6 அமைச்சர்கள் வரை பதவி ஏற்கலாம். ஏற்கெனவே என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 4 அமைச்சர்கள் என்ற முடிவை எடுத்துள்ளது. இதனால் பாஜகவிற்கு இரண்டு அமைச்சர் பதவி மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இந்தச் சூழலில் பாஜக மேலிடத்தில் இருந்து ரங்கசாமிக்கு அழுத்தம் தரப்பட்டு வருவதாக தெரிகிறது. இதனால் மீண்டும் பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 


புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளிலும், பாஜக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. திமுக-காங்கிரஸ் கூட்டணி 8 இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளது.  சுயேட்சை வேட்பாளர்கள் 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். புதுச்சேரி சட்டமன்றத்தில் ஆட்சியமைக்க 16 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்ற அதிமுகவிற்கு இந்த முறை ஒரு சீட் கூட கிடைக்கவில்லை. இதனால் பிரதான கட்சியான அதிமுக, புதுச்சேரியில் ஒரு சீட் கூட இல்லாமல் அடுத்த 5 ஆண்டுகளை கடக்க வேண்டியுள்ளது. 




புதுச்சேரியில் அதிமுகவிற்கு என கணிசமான வாக்குகள் இருக்கும் நிலையில், புதிதாக களமிறங்கிய பாஜக கூட 6 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், அதிமுகவிற்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாமல் போனது. இதனால் ஆட்சியிலும் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக ஆகிய இரு கட்சிகளும் கணிசமான இடங்களை கைப்பற்றி புதுச்சேரியில் இருவர் கூட்டணியோடு ஆட்சியை அமைக்க உள்ளனர். 


பாஜக எப்படியும் 2 முதல் 3 அமைச்சர்களை பெறப்போகிறது. என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வராகிறார்; அக்கட்சியின் மேலும் சிலர் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களாகின்றனர். ஆனால் அதிமுக தான் இந்தமுறை எண்ணிக்கை துவங்காமல் பார்வையாளராக இருக்கப்போகிறது.