தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக, திமுக, பாமக வேட்பாளர்களின் சொத்து மதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியின் சொத்து மதிப்பு ரூ.60 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக, திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சைகள் உட்பட 45 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வேட்புமனுக்களில் அனைவரும் தங்களது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், வருவாய் மற்றும் கடன் குறித்து தெரிவித்துள்ளனர். இதில் திமுக வேட்பாளர் ஆ.மணி, தனக்கு சொத்து மற்றும் வருவாயாக, கையில் ரொக்கமாக ரூ.50,000, ரூ. 8 லட்சம் மதிப்புள்ள 160 கிராம் தங்கம். அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.3,22,50,000 எனவும், தனது மனைவி புவனேஸ்வரி பெயரில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.4,24,12,000 தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு ரூ.2,12,87,262 கடன் இருப்பதாக வேட்புமனவில் தெரிவித்துள்ளார்.



 

அதேப்போல் அதிமுக வேட்பாளர் டாக்டர் ஆர்.அசோகன் பெயரில், அசையும் சொத்துக்கள் ரூ.38,47,912 எனவும், தனது மனைவி டாக்டர் பாஸ்கின் டிசோசா பெயரில் ரூ.29,53,620 என தெரிவித்துள்ளார். மேலும் தனது  தந்தை பூக்கடை ரவி பெயரில் ரூ.74,99,793 எனவும், தாயார் ராஜாத்தி பெயரில் ரூ.51,76,104 மதிப்பிலும், தம்பி சரண்குமார் பெயரில் ரூ.8,21,121 மதிப்பு என குடும்பத்தில் உள்ளவர்களின் ஒட்டுமொத்த அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.2,12,11,055 மதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், ரூ.1.59 கோடி கடன் உள்ளதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.



 

அதேபோல் பாமக சார்பில் போட்டியிடும் சௌமியா அன்புமணி, தனக்கு விவசாயம் சார்ந்த வருவாயாக ரூ.28 லட்சம், விவசாயம் சாராத வருவாயாக ரூ.1,54,04,070 கிடைப்பதாகவும், இவை தவிர, ரூ.20,71,840  மதிப்பிலான 25.90 கிலோ வெள்ளி பொருட்களும், ரூ.1,92,01,120 மதிப்பிலான 2, 927 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.1,64,38,835 மதிப்பிலான 151.5 கேரட் வைர நகைகள் ஆகியவை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதில் சௌமியா பெயரில் வருவாய் மற்றும் நகைகள் என மொத்தம் ரூ.5,59,15,865 மதிப்பில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், சௌமியா  மற்றும் அவரது குடும்பத்தார் பெயரில் அசையும், அசையா சொத்துக்கள், நகைகள் உள்ளிட்டவையாக ரூ.60,23,83,186 மதிப்பில் சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் பல்வேறு வகையில் ரூ. 9,15,40,738 கடன் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் அதிக சொத்து வைத்திருப்பவர் சௌமியா அன்புமணி என்பது குறிப்பிடத்தக்கது.