PM Modi: பிரதமராக பொறுப்பேற்ற பிறகு ஒருமுறை கூட செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு மோடி பதிலளித்துள்ளார்.


செய்தியாளர்களை சந்திக்காதது ஏன்?


நாடாளுமன்ற தேர்தலில் 4 கட்ட வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்துள்ளன. 5ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது. இதனிடயே, பிரதமர் மோடி தீவிர பரப்புரைகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு அங்கமாக ஊடகங்களுக்கும் பேட்டி அளித்து, பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் அளித்த பேட்டியில், பிரதமராக பொறுப்பேற்று 10 ஆண்டுகள் ஆகியும் ஒருமுறை கூட செய்தியாளர்களை சந்திக்காதது தொடர்பாக, எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கான காரணம் என்னவென கேள்வி எழுப்பப்பட்டது.


பிரதமர் மோடி விளக்கம்:


செய்தியாளர்களை சந்திக்காதது தொடர்பாக பேசிய பிரதமர் மோடி, “நான் கடினமாக உழைக்க வேண்டும். நான் ஏழைகளின் வீட்டிற்கு செல்ல விரும்புகிறேன். நான் ரிப்பன்களை வெட்டிவிட்டு,  விக்யான் பவனில் இருந்தபடி புகைப்படங்களை எடுத்துக்கொள்ள முடியும். நான் அதை செய்யவில்லை. நான் ஜார்கண்டின் ஒரு சிறிய மாவட்டத்திற்குச் சென்று ஒரு சிறிய திட்டத்தை நோக்கி வேலை செய்கிறேன். நான் கொண்டுவந்துள்ள இந்த கலாச்சாரம் சரி என்றால் ஊடகங்கள் அதனை சரியாக காட்டும். இல்லை என்றால் அது காட்டப்படாது. 


ஊடகங்கள் தனி நிறுவனம் கிடையாது - மோடி


இன்றைய தேதிக்கு ஊடகங்கள் ஒரு தனி நிறுவனமாக இல்லை. நடுநிலையுடன் இருக்க வேண்டிய ஊடகங்கள் அவ்வாறு இல்லை. அரசியல் சார்புடன் செயல்படுகின்றன. பத்திரிகையாளர்கள் தங்களுடைய பார்வையையும் கொள்கைகளையும்தான் முன்னிறுத்துகிறார்கள். நாடாளுமன்றத்துக்குத்தான் நான் பதிலளிக்க வேண்டியவன். இன்று, பத்திரிகையாளர்களும் அவரவர் விருப்பங்களுடன் அடையாளம் காணப்படுகிறார்கள். இப்போதெல்லாம் ஊடகங்கள் பக்கச்சார்பு அற்றவையாக இல்லை.


இப்போது மக்களுக்கு உங்களுடைய (பத்திரிகையாளர்கள்) நம்பிக்கைகள் என்னவென்பது பற்றியும் தெரியும். முன்பெல்லாம் ஊடகம் முகமற்றவையாக இருந்தது. யார் எழுதுகிறார்கள்... அதன் கொள்கை என்ன.. யாரும் அதைப் பற்றி முன்னர் கவலைப்பட்டதில்லை. ஆனால் தற்போது நிலைமை அவ்வாறு இல்லை. அரசியலில் செயல்பாடுகள் பற்றிக் கவலைப்படாமல், ஊடகங்களைக் கையாள்வதை மையப்படுத்திச் செயல்படுகிற புதிய கலாசாரம் உருவாகியிருக்கிறது.


நாடாளுமன்றத்தில் பதிலளிப்பேன்:


முன்னர் ஊடகங்கள் மட்டுமே தகவல்தொடர்புக்கான ஆதாரமாக இருந்ததாகவும், தற்போது புதிய தகவல் தொடர்பு ஊடகங்கள் கிடைத்துள்ளன. நீங்கள் பொதுமக்களுடன் பேச விரும்பினால், அதற்கான தொடர்பு இருவழியாக உள்ளது. இன்று, ஊடகங்கள் இல்லாமல் பொதுமக்களும் தங்கள் குரலை வெளிப்படுத்த முடியும். பதில் சொல்ல வேண்டிய நபரும் கூட, ஊடகங்கள் இல்லாமலே தனது கருத்தை நன்றாக வெளிப்படுத்த முடியும். அதோடு, நான் நாடாளுமன்றத்திற்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டவன். நாடாளுமன்றத்தில் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிப்பேன்” என பிரதமர் மோடி பேசியுள்ளார்.