PM Modi Chennai Visit: சென்னை நந்தனத்தில் இன்று நடைபெற உள்ள, பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.


பிரதமர் மோடி சென்னை வருகை:


நாடாளுமன்ற ம்க்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதற்கான பணிகளில் தமிழ்நாடு பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த 27ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற அண்ணாமலை பாத யாத்திரையின் நிறைவு விழா கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதோடு, பல்வேறு நலத்திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.  இந்நிலையில், 6 நாட்களுக்குள், பிரதமர் மோடி மீண்டும் இன்று தமிழ்நாடு வருகிறார். சென்னை நந்தனத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அந்த  மேடைக்கு ‘மீண்டும் மோடி சர்க்கார்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. திமுக பொதுக்கூட்டத்திற்கு நிகராக மக்களை திரட்டி, இந்த பொதுக்கூட்டத்தை நடத்திட பாஜக முனைப்பு காட்டி வருகிறது. பிரதமரின் அடுத்தடுத்த இந்த பயணம், தமிழக பாஜகவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


பிரதமரின் சென்னை பயண விவரம்:



  • மகாராஷ்டிராவில் இருந்து விமானம் மூலம் பிற்பகல் 2.45 மணிக்கு சென்னை வந்தடைகிறார் பிரதமர் மோடி

  • விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் செல்கிறார்

  • மதியம் 3.30 மணிக்கு அணு உலை ரியாக்டர் மேம்பாடு (உற்பத்தி) திட்டத்தை பார்வையிடுகிறார்.

  • அதனை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டர் மூலமாக மாலை 5 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார்

  • சாலை மார்க்கமாக சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தை அடைந்து, அங்கு நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

  • கூட்டம் முடிந்ததும் மாலை 6.35 மணிக்கு விமானம் மூலமாக பிரதமர் மோடி தெலங்கானா செல்கிறார்.


பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்:


பிரதமர் வருகையையொட்டி சென்னையில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த போலீசார் மற்றும் ஆயுதப்படை, கமாண்டோ, தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார் என மொத்தம் 15 ஆயிரம் பேர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கல்பாக்கம் அணுமின் நிலைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமரின் பாதுகாப்புக்கு 5 ஆயிரம் போலீசார் ஈடுபடுகின்றனர். அதன்படி, 5 அடுக்கு பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் உள்ள முக்கிய ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மற்றும் கல்பாக்கம் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 'டிரோன்'கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தமட்டில் இந்த தடை உத்தரவு ஏப்ரல் 29-ந் தேதி வரை அமலில் இருக்கும் எனவும், தடையை மீறி 'டிரோன்'கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.