நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரச்சாரம் மேற்கொள்வதற்காக பிரதமர் மோடி நாளை சேலம் வருகிறார். சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பகுதியில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொது கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் சேலம், நாமக்கல் மற்றும் கரூர் நாடாளுமன்ற தொகுதி மக்களிடையே பிரதமர் உரையாற்ற உள்ளார்.
கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்பு:
பிரதமர் நரேந்திர மோடி சேலம் பொதுக்கூட்டத்தில் நாளை பங்கேற்று உரையாற்ற உள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டிரோன்கள் பறக்கத் தடை:
மோடியின் வருகையை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெறும் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி மற்றும் சேலம் விமான நிலைய ஆகிய பகுதிகள் ரெட் ஜோனாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பகுதியும் முழுமையாக காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படுகிறது. பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு இன்று மற்றும் நாளை சேலம் மாவட்டம் முழுவதும் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வெளி வாகனம் பறக்கவும் தடை விதித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் பொதுக் கூட்டத்திற்கு வரும் அரசியல் கட்சி தலைவர்களின் வாகனங்களை சோதனை இடவும் தேர்தல் பறக்கும் படையினர் தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
பிரதமர் சேலம் வருகை:
பாரதிய ஜனதா கட்சி சார்பில் சேலத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிற்பகல் 12:50 மணியளவில் சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி வருகிறார். பின்னர் பிற்பகல் 1 மணி முதல் பிற்பகல் 1:50 மணி வரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். உரை முடிந்ததும் பிற்பகல் 1:55 மணிக்கு பொதுக்கூட்டம் மைதானத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு சேலம் விமான நிலையம் சென்றடைகிறார். பின்னர் சேலம் விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.