PM Modi: ஏபிபி தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், மத அடிப்படையிலான இடஒதுக்கீடு உள்ளிட்டவை தொடர்பாக எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி கடுமையாக சாடினார்.


பிரதமர் மோடி பிரத்யேக பேட்டி:


நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பரப்புரைக்காக ஒடிசா சென்றபோது,  ஏபிபி நியூஸ் தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது, " மக்களிடையே இந்த அளவிலான உற்சாகம் அரிதாகவே காணப்படும். மொழித் தடைகள் இருந்தபோதிலும், மக்களின் இதயங்களுடன் முழுமையான உணர்வுபூர்வமான தொடர்பு உள்ளது. இது ஒடிசாவுக்கு ஒரு திருப்புமுனையைக் குறிக்கிறது. ஜூன் 4ம் தேதி, பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்திய அரசியல் வரலாற்றில் மகத்தான வெற்றியைப் பெறும்" என்று பிரதமர் மோடி பேசினார். தொடர்ந்து எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.


”மேற்குவங்கத்தில் வாக்கு வங்கி அரசியல்”


மேற்கு வங்கத்தின் கடந்த கால பொருளாதாரம் மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலையை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி,  "மேற்கு வங்கம் ஒரு காலத்தில் பொருளாதார தலைநகராக இருந்தது. வங்காளமானது பல நூற்றாண்டுகளாக இந்த நாட்டில் சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களை வழிநடத்தியது. வங்காளத்தின் திறன், இன்றும் இளைஞர்களை நம்பியிருக்கிறது.   ஆனால் தவறான கொள்கைகள் மற்றும் தலைமை காரணமாக, முதலில் இடதுசாரிகள், பின்னர் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் காரணமாக மாநிலத்தில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டு 50 ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலத்தை சீரழித்துள்ளனர். மம்தா பானர்ஜி நாடாளுமன்றத்தில் இருந்தபோது, பல பிரச்னைகள் தொடர்பாக கேள்வி எழுப்பினார். தற்போது அந்த பிரச்னைகளிடமே சரணடைந்துள்ளார். மம்தா பானர்ஜிக்கு வாக்கு வங்கியானது ஒரு தங்கச் சுரங்கமாக மாறியுள்ளது. இந்த மாற்றத்தை வங்காளத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த மக்கள் வாய்ப்புகளைத் தேடி அலைகின்றனர். இந்த முறை மக்களவையில் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் பாஜக அமோக வெற்றி பெறும்” என பதிலளித்தார்.


விசாரணை அமைப்புகளும், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளும்:


விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் மோடி பேசினார். அதன்படி, “அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்குகளில் 3 சதவிகிதம் மட்டுமே அரசியல்வாதிகள் மீது உள்ளது. மற்ற 97 சதவிகித வழக்குகள் அதிகாரிகள், போதைப்பொருள் மாஃபியாக்கள், நில மாஃபியாக்கள் மற்றும் மணல் மாஃபியாக்கள் மீது தான் உள்ளன. சோதனையின் போது கண்டுபிடிக்கப்படும் பணக் குவியல்கள் அரசியல்வாதிகளின் வீடுகளில் இருந்து வெளிவரும் நேரடி ஆதாரம். வங்காளமோ, ஜார்கண்டோ எதுவாக இருந்தாலும் சரி, நோட்டுகளை எண்ணும் வங்கி இயந்திரங்கள் பெருமூச்சு விடுகின்றன. கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. யாருடைய பணம் பறிமுதல் செய்யப்படுகிறதோ அவர்கள் அப்பாவிகளா?” என மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.


காங்கிரஸை சாடிய பிரதமர்:


காங்கிரஸ் குறித்து பேசியபோது, "இந்திய அரசியலமைப்பின் உணர்வுகளில் காங்கிரஸ் கத்தியை வீசுகிறது. மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த பார்க்கிறது, இதைத் தடுக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீட்டில் மத அடிப்படையில் இடஒதுக்கீடு இல்லை என்பதை உறுதிப்படுத்த எனது கடைசி மூச்சு வரை போராடுவேன் என்று நான் உறுதியளிக்கிறேன். சமூகத்தின் அனைத்து பிரிவினரின் அபரிமிதமான ஆதரவு கிடைத்திருப்பது எனது பாக்கியம். தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் சிறப்பு ஆசீர்வாதங்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என ஏபிபி நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.