Modi Election Campaign: பிரதமர் மோடி குஜராத்தில் இன்று 4 இடங்களில் நடைபெறும் பேரணிகளில் இன்று பங்கேற்கிறார்.


குஜராத்தில் பிரதமர் மோடி:


நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று, தனது சொந்த மாநிலமான குஜராத் சென்றடைந்தார். அங்கு குஜராத் ஸ்தாபன தினமான நேற்று இரண்டு பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. அதன்படி, பனஸ்கந்தா பகுதியில் உள்ள தீசா மற்றும் சபர்கந்தாவில் உள்ள ஹிம்மத்நகர் ஆகிய பகுதிகளில் நேற்று பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.  குறிப்பாக பதான் மற்றும் பனஸ்கந்தா மக்களவைத் தொகுதி மக்களவை கவரும் விதமாக நேற்று, பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.


4 பேரணிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி: 


இதைதொடர்ந்து இரண்டாவது நாளான இன்று ஆனந்த், சுரேந்திரநகரில் உள்ள வாத்வான், ஜூனாகத் மற்றும் ஜாம்நகர் ஆகிய இடங்களில், நடைபெற உள்ள பாஜக பேரணிகளில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.  அப்போது, ஆனந்த், கெடா, சுரேந்திரநகர், ராஜ்கோட், பாவ்நகர், ஜூனாகத், போர்பந்தர், அம்ரேலி மற்றும் ஜாம்நகர் ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க உள்ளார்.


குஜராத்தை முழுமையாக கைப்பற்ற இலக்கு..!


இந்த வாரம் முழுவதும் தனது முக்கிய தலைவர்கள் மற்றும் பேச்சாளர்களை கொண்டு, பாஜக குஜராத்தில் பொதுக் கூட்டங்கள் மற்றும் பேரணிகளை ஏற்பாடு செய்துள்ளது. 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது, மேலும் 2024 ஆம் ஆண்டில் பாஜக ஹாட்ரிக் வெற்றியை இலக்காகக் கொண்டுள்ளது. அதேநேரம், பாஜக தலைவர் ஒருவரின் கருத்தால் குஜராத்தில் சௌராஷ்டிரா பகுதியில், க்ஷத்ரியர்கள் மற்றும் ராஜபுத்திரர்கள் பாஜக மீது அதிருப்தியில் உள்ளன. இருப்பினும், பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் சூரத்தில் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.


காங்கிரஸ் மீண்டு வருமா?


இந்த ஆரம்பகட்ட சரிவில் இருந்து மீண்டு காங்கிரஸ் கட்சி குஜராத்தில் தனது வெற்றிக் கணக்கை தொடங்க தீவிரம் காட்டுகிறது. இதற்காக  காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாக்கள் குஜராத்தில் இந்த வாரம் பரப்புரை மேற்கொள்ள உள்ளனர். அதன்படி,  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, மே 3 அன்று லக்கேனி பனஸ்கந்தாவில் நடைபெறும் பேரணியில் பங்கேற்று உரையாற்றவுள்ளார்.  முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும் பரப்புரைக்கு தயாராகி வருகின்றனர்.


குஜராத் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 94 மக்களவை தொகுதிகளில் வரும் 7ம் தேதி மூன்றாம்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.