மக்களவை தேர்தல் முடிவுகள், சில கட்சிகளுக்கு ஆச்சரியத்தையும் சில கட்சிகளுக்கு அதிர்ச்சியையும் தந்துள்ளன. கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கும் விதமாக நேற்று அறிவிக்கப்பட்ட முடிவுகள் அமைந்திருக்கின்றன. 370 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகளில் சொல்லப்பட்டது.
தேர்தல் முடிவுகள் 2024: ஆனால், பாஜகவுக்கு தற்போது தனிப்பெரும்பான்மை கூட கிடைக்கவில்லை. 240 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. மத்தியில் ஆட்சி அமைக்க 272 எம்பிக்களின் ஆதரவு தேவை என்பதால் கூட்டணி கட்சிகளை நம்பியுள்ளது.
தேசிய அளவில் இந்தியா கூட்டணி 234 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில் ஆட்சி அமைக்க பாஜக முயன்று வருகிறது. ஆனால், பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோரிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
புதிய ஆட்சி அமைக்கும் நோக்கில் பிரதமர் பதவியை மோடி ராஜினானா செய்துள்ளார். அதை குடியரசு தலைவர் திரௌபதி முர்முவும் ஏற்று கொண்டுள்ளார். பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்பு நடந்த கடைசி அமைச்சரவை கூட்டத்தில் சக அமைச்சர்கள் முன்னிலையில் பேசிய மோடி, "வெற்றியும் தோல்வியும் அரசியலில் ஒரு பகுதி. எண்ணிக்கை விளையாட்டு தொடர்ந்து கொண்டு இருக்கிறது" என்றார்.
அமைச்சரவை கூட்டத்தில் நடந்தது என்ன? தொடர்ந்து பேசிய அவர், "கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் நல்ல பணிகளை செய்துள்ளோம். அதைத் தொடர்ந்து செய்வோம். கிடைத்துள்ள தேர்தல் முடிவுகள், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் வெற்றியை முடிவுகள் காட்டுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த முறையில் பணியாற்றிய மத்திய அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நீங்கள் அனைவரும் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறீர்கள்" என்றார். நடப்பு நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வரும் 16ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
நடந்து முடிந்த தேர்தலில் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்குவங்கம் போன்ற பெரிய மாநிலங்களில் இந்தியா கூட்டணி மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்தது. குறிப்பாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் பாஜக, அதிமுகவை தோற்கடித்து இந்தியா கூட்டணி சாதனை படைத்துள்ளது.
இந்தியா கூட்டணியை பொறுத்தவரையில், 99 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் சமாஜ்வாதி கட்சி 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக 29 இடங்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் 22 இடங்களை திமுகவும் கைப்பற்றியுள்ளது.
இதையும் படிக்க: Lok Sabha Election 2024: “நிதிஷ், சந்திரபாபு நாயுடுவிடம் இதுவரை பேசவில்லை” - இந்தியா கூட்டணி முடிவு பற்றி சரத்பவார் விளக்கம்!