PM Modi: நாடாளுமன்ற மக்களவ தேர்தல் பரப்புரையை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி, தற்போது கன்னியாகுமரியில் தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.


நாடாளுமன்ற மக்களவை தேர்தல்:


நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலின் ஏழு கட்ட வாக்குப்பதிவிற்கான தேர்தல் பரப்புரை நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இதையடுத்து கடைசி கட்ட வாக்குப்பதிவு வரும் ஜூன் 1-ம் தேதி நடைபெற்று, ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனிடையே, தேர்தலை ஒட்டி நாடு முழுவதும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு, தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்தனர்.


அந்தவகையில், தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் சூறாவளி பரப்புரயை மேற்கொண்டார்.


200-க்கும் மேற்பட்ட பரப்புரை கூட்டங்கள்:


அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி 76 நாட்களில் 206 தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டு நாட்டில் சாதனை படைத்துள்ளார். தேர்தல் அட்டவணை வெளியான மார்ச் 16 முதல் மே 30 வரை 76 நாட்கள் பேரணிகள், சாலை நிகழ்ச்சிகள், கூட்டங்கள் என 206 நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்றார். கடந்த மூன்று நாட்களாக ஒரு நாளைக்கு ஐந்து பரப்புரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.


அதுமட்டுமின்றி கடந்த 22 நாட்களாக தினமும் நான்கு இடங்களில் பரப்புரையில் ஈடுபட்டார். மே மாதத்தில், இந்தியா முழுவதும் 96 பரப்புரை நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.


நான்கு மாநிலங்களில் கூடுதல் கவனம்:


பிரதமர் மோடி நான்கு மாநிலங்களில் குறிப்பிட்டு அதிக கவனம் செலுத்தினார். நாட்டிலேயே அதிக மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட (80 இடங்கள்) உத்தரப் பிரதேசத்தில், அதிகபட்சமாக 31 தேர்தல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றினார். கடந்த தேர்தலில் அந்த மாநிலத்தில் 64 இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இம்முறையும் அந்த மாநிலத்தில் தனது பலத்தை காட்ட வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கமாகும்.


அதனை தொடர்ந்து,  பீகாரில் 20 தேர்தல் பரப்புரைகளில் பிரதமர் பங்கேற்றார். மகாராஷ்டிராவில் 19 நிகழ்ச்சிகளிலும், மேற்கு வங்கத்தில் 18 நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பரப்புரை மேற்கொண்டார்.  குறிப்பாக இந்த தேர்தல் மூலம் மேற்கு வங்கத்தில் தனது பலத்தை அதிகரிக்க பாஜக விரும்புகிறது.


அதனால்தான் கொல்கத்தாவில் பிரமாண்ட ரோட் ஷோவுடன் 18 பிராந்தியங்களில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார். மும்பை மற்றும் பாட்னாவில் நடந்த பிரதமர் மோடியின் ரோட்ஷோவிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


ஒடிசாவில் தடம் பதிக்க முனைப்பு:


ஒடிசாவில் பாஜக தனித்து போட்டியிட்டுள்ளது. முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை வீழ்த்தும் நோக்கில், பூரியில் பிரமாண்ட ரோட் ஷோ உட்பட 10 பேரணிகளில் பங்கேற்றார்.  மத்திய பிரதேசத்தில் 10 பகுதிகளிலும், ஜார்கண்டில் 7 இடங்களிலும் மோடி பிரசாரம் செய்தார். ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் தலா நான்கு பிராந்தியங்களில் பிரச்சாரம் நடத்தப்பட்டது.


தென்னிந்தியாவில் இருப்பை தக்கவைக்க தீவிரம்:


தென் மாநிலங்களில் பாஜக தனது இருப்பை தக்கவைக்க போராடி வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட  ஐந்து மாநிலங்களிலும் 35 தேர்தல் பரப்புரை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதிலும் அதிகபட்சமாக கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் தலா 11 நிகழ்ச்சிகளிலும், தமிழகத்தில் 7 நிகழ்ச்சிகளிலும் மோடி பங்கேற்றார். 


சொந்த மாநிலத்தில் 5 பரப்புரை நிகழ்ச்சிகள்:


பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் ஐந்து பிரச்சார நிகழ்ச்சிகளை நடத்தினார்.  பஞ்சாபில் நான்கு பேரணிகளும், ஹரியானாவில் மூன்று பேரணிகளும் நடத்தப்பட்டன. டெல்லி, இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தலா இரண்டு பேரணிகள் நடத்தப்பட்டன.  இருப்பினும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு யூனியன் பிரதேசமாக துண்டாடப்பட்ட காஷ்மீர் மற்றும் பெரும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் ஆகிய பகுதிகளில் பிரதமர் மோடி தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடவில்லை.


முன்னதாக,  2019 தேர்தலின் போது ​​பிரதமர் மோடி சுமார் 145 பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.