PM Modi Interview: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறும் சூழலில், பிரதமர் மோடி பல்வேறு முக்கிய பிரச்னைகள் தொடர்பாக விரிவாக பேசியுள்ளார்.


பிரதமர் மோடி நேர்காணல்:


நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்க் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக வரும் 19ம் தேதி, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உட்பட மொத்தம் 102 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.இந்நிலையில் பிரதமர் மோடி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில், தேர்தல் பத்திரங்கள், ரஷ்யா-உக்ரைன் போருக்கு இடையே தனது தலையீடு, ராமர் கோயில் திறப்பு, சனாதன தர்ம பிரச்னை, காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் பதிலளித்துள்ளார்.


ஒரே நாடு ஒரே தேர்தல்:


ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கேள்விக்கு, “ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது எங்கள் உறுதி. இந்த திட்டத்திற்காக நாட்டில் பலர் களத்தில் இறங்கி உள்ளனர்.  இதுதொடர்பான குழுவிற்கு பலரும் ஆலோசனைகளை தெரிவித்துள்ளனர்.  மிகவும் சாதகமான மற்றும் புதுமையான ஆலோசனைகள் வந்துள்ளன. அந்த அறிக்கையின் அடிப்படையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்தினால், நாட்டிற்கு பல்வேறு பலன்கள்கிடைக்கும்” என பிரதமர் மோடி தெரிவித்தார்.


சனாதன சர்ச்சை:


சனாதன தர்மம் தொடர்பான கேள்விக்கு, "இது காங்கிரஸிடம் கேட்கப்பட வேண்டும். ஒரு காலத்தில் இந்த காங்கிரசுடன் தான் மகாத்மா காந்தி தன்னை இணைத்துக் கொண்டார்.  இதே காங்கிரஸைச் சேர்ந்த இந்திரா காந்தி பகிரங்கமாக ருத்ராட்ச மாலைய தனது கழுத்தில் அணிந்திருந்தார். அப்படி இருக்கையில், தற்போது சனாதனத்திற்கு எதிராக இப்படி விஷத்தை கக்கும் நபர்களுடன் உட்கார வேண்டிய கட்டாயம் என்ன என்று காங்கிரஸிடம் கேள்வி கேட்க வேண்டும். திமுக என்பது வெறுப்பு எண்ணத்துடன்தான் பிறந்தது. ஆனால், இங்கு கேள்வி காங்கிரஸை பற்றியது. காங்கிரசுக்கு நிர்ப்பந்தம் என்பது நாட்டுக்கு கவலையளிக்கும் விஷயம்" என பிரதமர் மோடி கூறினார். 


வடக்கு - தெற்கு பிரிவினை:


இந்தியாவை வெவ்வேறு பகுதிகளாக பார்ப்பது,  திமுக மற்றும் காங்கிரஸ் தலைவர்களுக்கு   இந்தியாவைப் பற்றிய "மனமின்மையை" காட்டுகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும்,  "இந்தியாவின் எந்தப் பகுதியில் ராமரின் பெயருடன் அதிக கிராமங்கள் உள்ளன? தமிழ்நாடு.  அதை எப்படி தனி (பகுதி) என்று சொல்லலாம்?. பன்முகத்தன்மைதான் நமது பலம், அதை நாம் கொண்டாட வேண்டும்” என தெரிவித்தார். 


தேர்தல் பத்திரம்:


தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கேள்விக்கு, “தேர்தல் பத்திரங்கள் இல்லை என்றால், பணம் எங்கிருந்து வந்தது, எங்கு சென்றது என்பதைக் கண்டுபிடிக்க யாருக்கு அதிகாரம் இருந்திருக்கும்? எனக்கு இருக்கும் கவலை என்னவென்றால், முடிவெடுப்பதில் குறைபாடுகள் இல்லை என்று நான் ஒருபோதும் கூறவில்லை. முடிவெடுப்பதில், நாங்கள் கற்றுக்கொள்கிறோம் மற்றும் மேம்படுத்துகிறோம். தேர்தல் பத்திர விவகாரங்களிலும் அதனை மேம்படுத்துவது மிகவும் சாத்தியம். ஆனால் இன்று நாட்டை முற்றிலும் கறுப்புப் பணத்தை நோக்கித் தள்ளிவிட்டோம். அதனால்தான் அனைவரும் வருந்துவார்கள் என்று நான் கூறுகிறேன்” என பிரதமர் மோடி விளக்கமளித்துள்ளார்.