சென்னையில் இன்று பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சி நடைபெறும் நிலையில் பொதுமக்கள் தங்கள் பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்களவை தேர்தலுக்கான வாக்கு சேகரிக்கும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவானது நடைபெறவுள்ளது. இதனால் 40 தொகுதிகளிலும் தேர்தல் பரப்புரை இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடி இன்று மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருகை தர உள்ளார். சென்னையில் தி.நகரில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகன பேரணி செல்ல உள்ளார். 


அப்போது வடசென்னை வேட்பாளர் பால் கனகராஜ், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி செல்வம், தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், திருவள்ளூர் வேட்பாளர் பொன்.பால கணபதி, அரக்கோணம் பாமக வேட்பாளர் கே.பாலு, காஞ்சிபுரம் பாஜக வேட்பாளர் ஜோதி வெங்கடேசன், ஸ்ரீபெரும்புதூர் தமாகா வேட்பாளர் வி.என்.வேணுகோபாலுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். 


தவிர்க்க வேண்டிய இடங்கள் 


பிரதமர் மோடியின் வாகன பேரணி நடைபெறும் நேரத்தில் சென்னையின் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை விமான நிலையம் தொடங்கி தி.நகர், அண்ணாசாலை, சைதாப்பேட்டை, ராஜ் பவன் பகுதி, காந்தி மண்டபம், மவுண்ட் பூந்தமல்லி சாலை ஆகிய இடங்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு  8 மணி வரை இலேசான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த பகுதிகளை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தவிர்க்குமாறும், மாற்றுப்பாதையில் செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 



  • பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை தியாகராய நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள வெங்கட நாராயண சாலை, ஜி.என்.செட்டி ரோடு, வடக்கு போக் சாலை பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் இருந்து கத்திப்பாரா பாலம் நோக்கி வரும் வாகனங்கள், சிப்பெட்டில் இருந்து அண்ணாசாலையில் நோக்கி செல்லும் வாகனங்கள், கத்திப்பாரா முதல் சைதாப்பேட்டை வரை, டைடல் பார்க்கில் இருந்து காந்தி மண்டபம் செல்லும் சாலை, அண்ணா சாலை முதல் மவுண்ட் ரோடு வழியாக செல்லும் வாகனங்கள் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை இடையிடையே தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இன்று தெலுங்கு வருடப்பிறப்பு அரசு விடுமுறை விடப்பட்டுள்ளதால் வழக்கம்போல் சென்னையில் உள்ள வணிக வளாகங்கள், கோயில்கள், தியேட்டர்கள், கடற்கரைகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் என்பதால், தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.