இந்தியாவின் நூற்றாண்டு பாரம்பரிய செய்தி குழுமமான ABP மற்றும் சி வோட்டர்ஸ் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்க வாய்ப்பிருப்பதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகளோடு 2021 தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை ஒப்பிடும் போது அதிமுகவின் ஓட்டுகள் மண்டல வாரியாக சரிந்துள்ளது.அதே நேரத்தில் திமுகவின் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் தென் மாவட்டங்களின் நிலை என்ன?
தென் மாவட்ட எம்.எல்.ஏ.க்களின் பலம், பல தருணங்களில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு உதவியுள்ளது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகியவை தென் மாவட்டங்கள் ஆகும்.
இந்த தென்மாவட்டங்களில் மொத்தம் 58 தொகுதிகள் உள்ளன. அதிகபட்சமாக, தென்தமிழகத்தின் தலைமையகமாக உள்ள மதுரையில் 10 தொகுதிகளும், விருதுநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் தலா 7 தொகுதிகளும் அமைந்துள்ளது. தமிழ்நாட்டு மக்கள் தொகையில் சுமார் 2 கோடி பேர் தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
மதுரை மாவட்டத்தில் மேலூர், மதுரை கிழக்கு, சோழவந்தான் (தனி), மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்திய தொகுதி, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய 10 தொகுதிகள் உள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய 7 தொகுதிகள் உளளன.
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை(தனி) ஆகிய 4 தொகுதிகள் உள்ளன. ராமநாதபுரத்தில் பரமக்குடி (தனி) திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், வேடசந்தூர் ஆகிய 7 தொகுதிகள் உள்ளன.
தேனி மாவட்டத்தில் பெரியகுளம், போடி, கம்பம், ஆண்டிப்பட்டி ஆகிய 4 தொகுதிகள் உள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 தொகுதிகள் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம் (தனி), கோவில்பட்டி ஆகிய 6 தொகுதிகள் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல், பத்மநாபபுரம், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய 6 தொகுதிகள் உள்ளன.
புதியதாக உருவாக்கப்பட்டுள்ள தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் ஆகிய 5 தொகுதிகள் உள்ளன.
எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய காலம் முதல் தென் தமிழகம் என்பது அ.தி.மு.க.வின் கோட்டையாகவே திகழ்கிறது. அந்தப் பெருமை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்திலும் தொடர்ந்தது. அதற்கு ஏற்றாற்போல, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் தென்தமிழகம் என்பது அ.தி.மு.க.வின் கைக்குள்ளே இருந்து வருகிறது. தி.மு.க., அ.தி.மு.க. என்று யார் ஆட்சிக்கு வந்தாலும் தென் தமிழகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுக்கு நிச்சயம் அமைச்சரவையில் இடமிருக்கும். அ.தி.மு.க. ஆட்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தவிர, திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திரபாலாஜி, வைகைச்செல்வன் என பலரும் அமைச்சர் பதவி வகித்துள்ளனர். அதேபோல, தி.மு.க. ஆட்சியிலும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தங்கம் தென்னரசு உள்பட பலரும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், தென் தமிழகத்தில் உள்ள 58 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி 32 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 26 இடங்களிலும் வெற்றி பெற்றன. இந்த நிலையில், ABP செய்திகள் மற்றும் சி வோட்டர்ஸ் இணைந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை இன்று வெளியிட்டுள்ளனர். இதன்படி, அ.தி.மு.க.வின் கோட்டையாகக் கருதப்பட்ட தென் தமிழகம் இந்த முறை தி.மு.க.வின் கோட்டையாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை 32 இடங்களில் தென் தமிழகத்தில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. கூட்டணி, இந்த முறை வெறும் 21 முதல் 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்பு உள்ளது தெரியவந்துள்ளது. கடந்த முறை தென் தமிழகத்தில் 26 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற தி.மு.க. இந்த முறை 33 முதல் 35 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்படுகிறது.
தென் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி, கடந்த முறையுடன் ஒப்பிடுகையில் தோராயமாக 10 இடங்களை இழப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகவும், தி.மு.க. கூட்டணி கடந்த முறையைக் காட்டிலும் கூடுதலாக 8 இடங்களில் வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, அறிமுகக் கட்சியாக களத்தில் இறங்கியுள்ள நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம், தினகரனின் அ.ம.மு.க. தென்மாவட்டங்களில் எந்த இடத்திலும் வெற்றி பெறாது என்றும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.