மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த அசாருதீன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது சேக்கிபட்டி கிராம பஞ்சாயத்து தலைவராக பிரியா என்பவர் தேர்வு செய்யப்பட்டார். கலைவாணி என்பவர் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.  கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் பிரியா சுமார் 2 லட்சத்து 70 ஆயிரத்து 735 ரூபாய் மதிப்பிலான, நாற்பத்தி ஏழு காசோலைகளையும், துணைத்தலைவர் கலைவாணி சுமார் 72 ஆயிரத்து 380 ரூபாய் மதிப்பிலான 9 காசோலையும்,  அட்மின் என்னும் பெயரில் இரண்டு லட்சத்து 39 ஆயிரத்து 610 ரூபாய் மதிப்பிலான இரண்டு காசோலைகளையும் தண்ணீர் குழாய் அமைத்து பராமரிப்பது  மற்றும் வேறு பராமரிப்பு பணிகள் என கூறி பெற்றுள்ளனர்.

 

இதுவரையிலும் 6 முறை பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று உள்ளது. அதற்காக 32,000 ரூபாய் மட்டுமே பஞ்சாயத்து நிதியிலிருந்து பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி சேக்கிபட்டி பஞ்சாயத்து தலைவர் பிரியா மற்றும் துணைத் தலைவர் கலைவாணி ஆகியோர் பஞ்சாயத்து நிதியை முறைகேடாக பயன்படுத்தி உள்ளனர். பஞ்சாயத்துக்களின் வரவு, செலவு கணக்குகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டபோதே, இந்த முறைகேடு எங்களுக்கு தெரிய வந்தது. சேக்கிப்பட்டி பஞ்சாயத்தில் தண்ணீர் குழாய் அமைப்பது, பாதாள சாக்கடை பணிகளை மேற்கொள்வது போன்ற எந்த பணிகளையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. ஆனால் இதற்கான தொகை முறைகேடாக பயன்படுத்தப்பட்டு உள்ளது.

 

இதற்கு அதிகாரிகள் பலரும் உடந்தையாக இருந்துள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே இருவர் மீதும் முறையான விசாரணையை மேற்கொண்டு, அவர்கள் மீதும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, வழக்கு குறித்து, ஊரக வளர்ச்சித் துறையின் இயக்குனர், மதுரை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மார்ச் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 









 

கொத்தடிமைகளாக மீட்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தரக்கோரிய வழக்கு மார்ச் 16ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

 

 

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் சேர்ந்த ஆரோக்கியசாமி பிரிட்டோ உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், " சத்திஸ்கரை சேர்ந்த 33 பேர் சிவகாசியில் உள்ள ஸ்ரீபதி பேப்பர் அண்ட் போர்டு கம்பெனியில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வருவதாக வீடியோ ஒன்றின் மூலம் தகவல் கிடைக்கப் பெற்றது. அது தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்ட உதவிகள் மையம் மற்றும் விருதுநகர் வருவாய் அலுவலர் உதவியால், கடந்த 2020 டிசம்பர் 4ஆம் தேதி 22 ஆண்கள் 9 பெண்கள் 2 குழந்தைகள் என மொத்தம் 33 பேர் மீட்கப்பட்டனர். அன்றைய தினமே,  அவர்களின் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டு சட்டிஸ்கருக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டனர்.

 

கொத்தடிமைகள் தடுப்பு சட்டப்படி மீட்கப்படுவோருக்கு விடுவிப்பு சான்றிதழும், 20 ஆயிரம் இழப்பீடும் வழங்கப்பட வேண்டும்.  ஆனால் இதுவரை அவர்களுக்கான விடுவிப்பு சான்றும்,  தலா 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடும் வழங்கப்படவில்லை. ஆகவே, சிவகாசியில்  கொத்தடிமைகளாக பணியாற்றி மீட்கப்பட்ட 33 பேருக்கும் விடுவிப்பு சான்றிதழ் மற்றும் தலா 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு வழக்கை மார்ச் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.