நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் "உள்ளாட்சித் தேர்தலில் அம்பாசமுத்திரம் நகராட்சியில் 12வது வார்டில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வேட்புமனு பரிசீலனையின் போது எனது வேட்பு மனுவை ஏற்க கூடாது என திமுகவைச் சேர்ந்த வேட்பாளர் ஆட்சேபனை தெரிவித்தார். எனது தந்தையின் பெயரில் உள்ள சொத்துக்களின் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் இருப்பதால் எனது வேட்பு மனுவை ஏற்க கூடாது என ஆட்சேபனை தெரிவித்தார்.
ஆனால் எனது பெயரில் எவ்வித வரி பாக்கியம் இல்லை என அரசு சார்பில் சான்று அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எனது மனு நிராகரிக்கப்பட்டது. இது ஏற்கத்தக்கது அல்ல. எனவே, அம்பாசமுத்திரம் நகராட்சியில் 12 வது வார்டில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவை ஏற்றுக்கொண்டு, நடைபெற இருக்கிற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
அலங்காநல்லூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பழுதடைந்த இயந்திரத்தை சரி செய்ய கோரிய வழக்கு - சர்க்கரை ஆலை ஆணையர் பதில் தர உத்தரவு
மதுரை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் மேட்டுப்பட்டி பகுதியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த சர்க்கரை ஆலையை நம்பி மதுரை மாவட்டம், திண்டுக்கல், விருதுநகர் பகுதிகளில் கரும்பு விவசாயம் செய்கின்றனர்.அலங்காநல்லூர் மேட்டுப்பட்டி கூட்டுறவு சர்க்கரை ஆலை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
எனவே, அலங்காநல்லூர் மேட்டுப்பட்டி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பழுதடைந்த இயந்திரத்தை சரி செய்ய ரூ.10 கோடி ஒதுக்கி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சர்க்கரை ஆலையை மீண்டும் தொடங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அப்போது நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழக சர்க்கரை ஆலை ஆணையர், அலங்காநல்லூர் மேட்டுப்பட்டி தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 3 வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.