தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தற்போதைய நிலவரப்படி திமுக 142 இடங்களின் முன்னிலையில் உள்ளது. அடுத்தபடியாக அதிமுக 91 இடங்களில் முன்னிலையில் உள்ளது. எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டுள்ள அதிமுகவின் பழனிசாமி 7000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இதுவரை பழனிசாமி 40990 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சம்பத்குமார் 13986 வாக்குகள் பெற்று பின் தங்கியுள்ளார்.
பழனிசாமியின் கோட்டையாகவே எடப்பாடி பார்க்கப்படுகிறது.ஜெயலலிதா தலைமையை ஏற்று 1989-இல் நடந்த தேர்தலில் எடப்பாடி தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு சட்டமன்றத்தில் நுழைந்தார் பழனிசாமி. அன்றுமுதல் எடப்பாடி பழனிசாமி என்று அதிமுகவினரால் அறியப்பட்டார். அதன் பின்னர் கட்சியில் அடுத்தடுத்து பதவிகளை பெற்றார் பழனிசாமி. சேலம் வடக்கு மாவட்டக் கழக இணைச் செயலாளர், சேலம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஆகிய பதவிகளை வகித்தார். சட்டமன்றத்தில் நுழைந்த பழனிசாமி, 1998-இல் திருச்செங்கோடு தொகுதியில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆனார்.
பின்னர் 2006-இல் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட பழனிசாமி, 2007-இல் அதிமுக அமைப்புச் செயலாளராகவும் பதவி வகித்தார். அதன்பின்னர் முக்கிய பதவிகளை பழனிசாமிக்கு அளித்தார் ஜெயலலிதா. தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் தலைவராக 2003-இல் நியமனம் செய்யப்பட்டார் பழனிசாமி. பின்னர் மீண்டும் 2011, 2016 தேர்தல்களில் எடப்பாடி தொகுதியில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக ஆனார். அந்த வெற்றிக்கு பிறகு அவர் அமைச்சரவையிலும் இடம் பெற்றார்.