Election 2024: குடியுரிமை திருத்தச் சட்டம் யாருடைய உரிமையையும் பறிக்கவில்லை என. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


பாஜக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி:


நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தேதி இன்னும் ஒரு சில தினங்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டை பொருத்தவரையில் திமுக தலைமையிலான கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான தனித்தனி கூட்டணி இன்னும் இறுதியாகவில்லை. பாஜக பல சிறிய கட்சிகளை தொடர்ந்து தனது கூட்டணியில் சேர்த்து வருகிறது. அந்த வகையில் தான், முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அணி மற்றும் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக ஆகியவையும் தற்போது பாஜக கூட்டணியில் இணைந்துள்ளன. 


தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை:


இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில், மத்திய அமைச்சர்கள் வி.கே. சிங் மற்றும் கிஷன் ரெட்டி ஆகியோர் தங்கியுள்ளனர். அவர்களை நேற்று இரவு 12 மணியளவில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்-ம் இதில் பங்கேற்றார். அப்போது தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் உடனிருந்தனர். 


”யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படவில்லை”


ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், “வருகின்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலை எதிர்கொள்வது குறித்து கலந்து ஆலோசித்தோம். குக்கர் சின்னம் கோரி விண்ணப்பம் செய்துள்ளோம். அந்த சின்னமே கிடைக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது. குறிப்பிட்ட சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற எந்த நிபந்தனையும் கூட்டணியில் விதிக்கவில்லை. மீண்டும் மோடி பிரதமர் ஆனால் தமிழ்நாட்டுக்கு நன்மை கிடைக்கும் என்பதால் கூட்டணி அமைத்துள்ளோம். மத்திய அரசு கொண்டு வந்துள்ள சி.ஏ.ஏ. சட்டம் யார் குடியுரிமையையும் பறிக்கவில்லை. பேச்சு வார்த்தையில் எந்த நிபந்தனையும் வைக்கவில்லை” என தெரிவித்தார்.


யாருக்கு எத்தனை தொகுதிகள்:


ஏற்கனவே, சில தினங்களுக்கு முன்பே மத்திய அமைச்சர்களை சந்தித்து, முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் 15 தொகுதிகளை கேட்டு விருப்பப் பட்டியலை வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் தரப்புக்கு, தலா நான்கு தொகுதிகளை ஒதுக்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, பாமக உடனான கூட்டணியை இறுதி செய்வது குறித்து, பாஜக இன்று பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய கல்வி மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதில் புதிய நீதிக்கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அண்மையில், சரத்குமார் தலைமையிலான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, பாஜகவில் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.