தமிழ்நாடு முழுவதும் நாளை மறுநாள் நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த ஒரு மாதமாக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வந்தனர். இந்த நிலையில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு செய்ய வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்துள்ளது. இதன்படி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இறுதி நாளான என்று அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 



இதன் ஒரு பகுதியாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலம் நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து சேலம் மாநகர் முழுவதும் ரோடு ஷோ பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளார். குறிப்பாக இன்று மதியம் 4 மணிக்கு சேலம் மாநகர் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து தொடங்கும் ரோடு ஷோ ஆனது அம்பேத்கர் சிலை, சுகவனேஸ்வரர் திருக்கோவில், வள்ளுவர் சிலை, கோட்டை மாரியம்மன் திருக்கோவில், முதல் அக்ரஹாரம், ராஜகணபதி கோவில், கடைவீதி வழியாக சென்று சேலம் டவுன் காவல் நிலையம் அருகில் நிறைவு பெறுகிறது. இதில் சாலையின் இருபுறமும் திரண்ட ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 


மேலும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ நிகழ்ச்சிக்காக சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.