சசிகலாவை தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளார். 


ஜெயலலிதா, சசிகலாவை தொடர்ந்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி தற்போது அதிமுக பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார். நீதிமன்ற தீர்ப்புகளுக்குப் பின் கடந்த ஆண்டு பொதுச்செயலாளராக அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதேசமயம் அதிமுக ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரண்டு பிரிவுகளாகவும் செயல்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக எதிர்கொண்ட மக்களவை தேர்தலில் அக்கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் போனது. 


8 இடங்களில் டெபாசிட் இழந்த அதிமுக, எடப்பாடி பழனிசாமி தலைமையில் 8 தேர்தல்களை சந்தித்து தோல்வியை தழுவியுள்ளது. இதனால் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி விரைவில் நிர்வாகிகள் ஆலோசிக்க உள்ளனர். அதேசமயம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக சார்பில் ராமநாதரபுரம் தொகுதியில் போட்டியிட்டு 2வது இடம் பிடித்தார். சுயேட்சையாக பலாப்பழம் சின்னத்தில் நின்ற அவர், 3.42 லட்சம் வாக்குகள் பெற்றார். 


சசிகலா அழைப்பு 


இதனிடையே சசிகலா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “அன்பு தொண்டர்களே கலங்க வேண்டாம். வரும் காலம் நமக்கானது. அனைவரும் வாருங்கள் வெற்றி அடைவோம், புதிய சகாப்தம் படைப்போம்! இதுபோன்ற தொடர் தோல்விகளை இயக்கம் எந்த நேரத்திலும் கண்டதில்லை. இனியும் நான் பொறுமையாக இருந்தால் அது நம் புரட்சித்தலைவருக்கும். புரட்சித்தலைவிக்கும், இந்த இயக்கத்தை உயிர் மூச்சாக எண்ணி வாழ்ந்து கொண்டு இருக்கும் கோடான கோடி தொண்டர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் செய்யும் மிக பெரிய துரோகமாகிவிடும். எனவே, இந்த இயக்கம் ஒன்றுபட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் கழக நிர்வாகிகள் அனைவரும் தங்களது சொந்த விருப்பு வெறுப்புகளை களைந்து, தமிழக மக்களையும், இந்த இயக்கத்தின் உன்னத தொண்டர்களின் உணர்வையும், உயர்வையும் எண்ணி அனைவரும் வாருங்கள்” என தெரிவித்திருந்தார். 


தொண்டர்கள் ஒன்றிணையுங்கள் - ஓபிஎஸ் 


இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் துவக்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மா அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒற்றுமையால் மீட்டெடுக்க அறைகூவல்” என தலைப்பு இடம் பெற்றுள்ளது. 


மேலும், "ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம். கத்தைக் குச்சியை முறிப்பது கடினம்." இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும். தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்,ஒர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே" என்னும் கழக நிறுவனர், புரட்சித் தலைவர், மக்கள் திலகத்தின் மந்திர மொழியை மருந்தாகக் கொள்வோம். நமது வெற்றியை நாளை சரித்திரமாக்கிட மனமாட்சியம் மறந்து ஒன்றரைக் கோடி தொண்டர்களும் ஒன்றாகுதல் காண்போம். மாண்புமிகு நம் அம்மா அவர்கள் உச்சத்தில் அமர்த்திப்போன கட்சியையும், அவர் ஒப்படைத்துப் போன ஆட்சியையும் ஒற்றுமையால் மீட்டெடுக்க எத்தகைய தியாகத்திற்கும் ஆயத்தமாவோம்”எனவும் ஓபிஎஸ் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.