தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழியை ஆதரித்து கோவில்பட்டி அருகேயுள்ள இனாம்மணியாச்சி விலக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது அவர் பேசுகையில் ”தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்ல திட்டங்களை கொண்டு வருகிறார். குறிப்பாக காலை உணவு திட்டம். தமிழக முதல்வர் கொண்டு வந்த காலை உணவு திட்டம் இன்று கனடாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மக்களைப்பற்றி கவலைப்படுகின்ற, மக்களை பற்றி சிந்திக்கின்ற முதல்வர் நமக்கு கிடைத்துள்ளார். விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வோம் என்று கூறி பிரதமர் நரேந்திரமோடி அதனை செய்யவில்லை.பிரதமர் நரேந்திர மோடி சொல்கிறார் ஒரே கட்சி, ஒரே கொடி, ஒரே பண்பாடு, ஒரே நாடு,ஒரே மதம் நம்முடைய ஆட்சியில் நிலைநாட்டப்படும் என்கிறார். அப்படி என்றால் அது சர்வாதிகார நாடு. பலமாநிலங்களையும், பல தேசிய இனங்களையும் கொண்ட நாடு இந்தியா, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கொடி என்பது பாசிசம், சர்வாதிகரம். அப்படிப்பட்ட சர்வாதிகரத்தினை திணிக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கும் போது தான் இண்டியா கூட்டணி உருவானது.




இண்டியா கூட்டணி கூட்டத்திற்கு சென்ற போது எல்லா மாநில முதல்வர்களும், நம்முடைய முதல்வர் மு.க.ஸ்டாலினை வந்து பார்ப்பதை பார்த்தேன்,முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சி நடத்தி கொண்டு இருக்கிறார். ஆனால் நரேந்திர மோடி சொல்கிறார் திராவிட இயக்கத்தினை அழித்து விட்டது தான் மறு வேலை என்கிறார்.பிரதமர் பேசக்கூடிய பேச்சா இது. ஒரு இயக்கத்தினை அழிக்க முடியும் என்று பேசலமா. அடக்குமுறையின் மூலமாக எந்த இயக்த்தினை அழிக்க முடியாது. சர்வாதிகாரிகள் நிலைத்து நின்று ஆட்சி நடத்த முடியாது. இந்த நாட்டின் பெருமை ஜனநாயகம் தான். பேச்சுரிமை, மொழி உரிமை இருக்கும் போது செந்தமிழ் மொழியை விடவா இன்னொரு மொழி இருக்கிறது. நெல்லையில் ராகுல்காந்தி அற்புதமாக பேசியதாகவும், கொட்டு மழையில் மக்கள் உங்கள் வீட்டு பிள்ளையாக நினைத்து கேட்டு கொண்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இருந்த போதிலும் மழையினால் உங்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு விடாக்கூடாது என்பதற்காக தனது உரையை முடிக்கிறேன். எனக்கு ஏமாற்றமே கிடையாது. நான் வெளியில் இருப்பதை விட சிறையில் இருப்பதை எனது தயார் நான் பாதுகாப்பாக இருப்பதாக கூறுவார் என்றார்.




வைகோ பேசிக்கொண்டு இருக்கும் போது திடீரென மழை பெய்ய தொடங்கியது. அப்போது ஒருவர் வைகோவிற்கு குடை பிடிக்க வந்தார். இதனை பார்த்த வைகோ, மக்கள் எல்லோரும் மழையில் நனைந்தபடி என் பேச்சை கேட்டு கொண்டு இருக்கின்றனர். எனக்கு மட்டும் குடை பிடித்தால் எப்படி. இது போன்று செய்யக்கூடாது. தான் சிறையில் இருக்கும் போது கூட மற்றவர்கள் சாப்பிட்டது போல தான் நானும் சாப்பிட்டேன். சிறப்பு உணவு எதுவும் பெறவில்லை என்றார். முன்னதாக சங்கரன்கோவிலில் தேர்தல் பிரச்சாரம் முடித்து விட்டு கோவில்பட்டியில் கனிமொழிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் இனாம்மணியாச்சி விலக்கில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோவினை சந்தித்து சிறிது நேரம் பேசினர். 3 பேரும் தங்களுக்குள் நலன் விசாரித்துக்கொண்டனர்.