மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் சார்பில் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளராகக் களமிறங்குகிறார் சச்சிதானந்தம். கம்யூனிஸ்ட்கள் என்றாலே எளிமைதான் என்று அறியப்படும் நிலையில், அவரிடம் கார், பைக் எதுவுமில்லை. கையில் வெறும் 2 ஆயிரம் ரூபாயை வைத்திருக்கும்  சச்சிதானந்தத்தின் தற்போதைய சொத்து மதிப்பு எவ்வளவு? பார்க்கலாம்.


26 லட்ச ரூபாய் மட்டுமே!


சச்சிதானந்தம் திண்டுக்கல் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இதன்படி, சச்சிதானந்தம் பெயரில் அசையும் சொத்து 4 லட்சத்து 69 ஆயிரத்து 463 ரூபாய் உள்ளது. அசையா சொத்து எதுவும் இல்லை. அவரது மனைவி பெயரில் ரூ.7 லட்சத்து 28 ஆயிரத்து 16 ரூபாய் சொத்து உள்ளது.


சச்சிதானந்தத்தின் பூர்வீக சொத்து மதிப்பு ரூ.14 லட்சம் ஆக உள்ளது. ஆக மொத்தம் சுமார் 26 லட்ச ரூபாய் மட்டுமே தன்னிடம் சொத்தாக இருப்பதாக சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.


கையிருப்பு எவ்வளவு?


கையில் ரொக்கமாக ரூ.2 ஆயிரம், மனைவி கையில் ரூ.500 ஆகிய பணம் மட்டுமே சச்சிதானந்தம் வசம் உள்ளது.      


கார், பைக் எதுவும் இல்லை


சச்சிதானந்தத்திடம் கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் எதுவும் இல்லை.அவரின் மனைவி, மகளிடமும் எந்த வண்டியும் இல்லை.




9 வழக்குகள் 


சச்சிதானந்தம் மீது 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனினும் அவர் எந்த வழக்கிலும் தண்டிக்கப்படவில்லை.


சச்சிதானந்தம் வருமான வரிக்கணக்கை வைத்து இருந்தாலும், வருமான வரித் தாக்கல் செய்வதில்லை.


தங்க நகைகள்


சச்சிதானந்தத்திடம் 60 கிராம் தங்க நகைகள் உள்ளன. அவரின் மனைவியிடம் 140 கிராம் தங்க நகைகள் உள்ளன. சச்சிதானந்தம் பெயரில் 5.68 ஏக்கர் பூர்விக நிலம் உள்ளது. அதே நேரத்தில் கடைகள், வணிக கட்டிடங்கள் உள்ளிட்ட சொத்துகள் எதுவும் இல்லை. அவர் மனைவி பெயரில் எந்த நிலமும் இல்லை. எனினும் சச்சிதானந்தம் பெயரில் வீட்டுக் குடியிருப்பு கட்டிடங்கள் உள்ளன.


அதே நேரத்தில் சச்சிதானந்தம் மீது 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயும் அவர் மனைவி கவிதா மீது 4 லட்சத்து 75 ஆயிரத்து 694 ரூபாயும் கடன்கள் உள்ளன. வங்கிகளில் நகைக் கடன் உள்ளிட்டவை மூலம் அவர் கடன் பெற்றுள்ளார்.    


இந்த தகவல்களை வேட்பு மனுத்தாக்கல் செய்தபோது அளித்த பிரமாணப் பத்திரத்தில் சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.