தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்றுகாலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் திட்டமிட்டபடி காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. வழக்கம் போல் பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டது. குறிப்பாக நெல்லை தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர் ராபர்ட் புரூஸ் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மனக்காவலம்பிள்ளை நகர் வாக்குச்சாவடி எண் 61 இல் வாக்குப்பதிவு குறித்து பார்வையிட சென்றார். அப்போது அங்கு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதாகி இருந்தது. இது குறித்து அங்கிருந்து அலுவலரிடம் கேட்டறிந்தார். மேலும் சுமார் 25 நிமிடம் வாக்குப்பதிவு இயந்திரம் தாமதம் காரணமாக வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது. எனவே அந்த வாக்குச்சாவடியில் மட்டும் கூடுதலாக 25 நிமிடம் வாக்காளர்களுக்கு நேரம் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
அதேபோல நெல்லை தச்ச நல்லூர் அருகே ஊருடையான் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி வாக்குச்சாவடி எண் 285 ல் இரண்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதடைந்தது. இதனால் காலையில் வாக்களிக்க வந்தவர்கள் வரிசையில் காத்திருந்தனர், அதே போல மேலப்பாளையம் முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதே போல ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாறு காரணமாக தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இது ஒருபுறமிருக்க வேட்பாளர்களும், முக்கிய தலைவர்களும் தங்களது தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்து வருகின்றனர். குறிப்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தூய யோவான் பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார். நெல்லை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா தனது வாக்கினை செலுத்தினார். அதே போல நெல்லை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளரும், பாஜக தமிழக சட்டமன்றக்குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் மகாராஜாநகர் ஜெயேந்திரா பள்ளியில் வாக்களித்தார்.
*தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நெல்லை மாவட்டம் லெப்பை குடியிருப்பு பகுதியில் உள்ள பெரிய நாயகிபுரம் TDTA தொடக்கப்பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
* இதேபோல தென்காசி தொகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ ஆகியோர் தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை செலுத்தினர்.
* மேலும் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவரும், தென்காசி தொகுதி வேட்பாளருமான ஜான்பாண்டியன் நெல்லை பாளையங்கோட்டை மனக்காவலன் பிள்ளை நகரில் உள்ள YMCA home வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
நெல்லை பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை காலை 9 மணி வரை நிலவரப்படி ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் 11.8.2% திருநெல்வேலியில் 6.72 சதவீதமும், அம்பாசமுத்திரத்தில் 12.13 சதவீதமும், பாளையங்கோட்டையில் 10 புள்ளி 5 சதவீதமும், நாங்குநேரியில் 9.5 சதவீதமும் ராதாபுரத்தில் 7.6 சதவீதமும் என மொத்தமாக 9.62% வாக்குகள் பதிவாகியுள்ளது
அதேபோல திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் 11 மணி வாக்கு பதிவு சதவீத நிலவரம் :
ஆலங்குளம் 27.87 சதவிகிதமும், திருநெல்வேலி 16.02 சதவிகிதமும், அம்பாசமுத்திரத்தில் 27.02 சதவிகிதமும், பாளையங்கோட்டையில் 27.02 ச்தவிகிதமும், நாங்குநேரியில் 23.5 சதவிகிதமும், ராதாபுரத்தில் 22.26 சதவிகிதமும் என மொத்தமாக 23.04 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.