தமிழகம் முழுவதும் பிப் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 29 ஆம் தேதி துவங்கி இன்று மாலை 5 மணியுடன் முடிவடைய உள்ளது. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரையில் 1 மாநகராட்சி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், களக்காடு ஆகிய 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள் உள்ளது. நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளது. இந்த 55 வார்டுகளில் நேற்று வரை மொத்தம் 215 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். நேற்று மட்டுமே 153 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். 


அதே போல 21 வார்டுகளை கொண்ட 3 நகராட்சிகளில் நேற்று மட்டும் 128 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ள நிலையில் இதுவரை மொத்தமாக 188 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர். 17 பேரூராட்சிகளில் உள்ள 273 வார்டுகளில் நேற்று ஒரே நாளில் மட்டும் 553 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ள நிலையில் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை 825 ஆக உள்ளது. மொத்தமாக நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள 397 பதவிகளுக்கு இதுவரை 1228 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இன்று இறுதிநாள் என்பதால் வேட்புமனு தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க உள்ளது. வேட்புமனு தாக்கல் ஒரு புறம் சூடுபிடித்து உள்ள நிலையில் வேட்பாளர்கள் மாற்றம் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களில் அவர்கள் போட்டியிட மறுப்பது உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெற்று வருகிறது. 




குறிப்பாக நெல்லை மாநகராட்சி 5 வது வார்டு திமுக வேட்பாளராக பாலமுருகன் என்ற பிரபு அறிவிக்கப்பட்டு இருந்தார். பின்னர் அவருக்கு பதிலாக ஜெகநாதன் மாற்றி அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதே போல 12 வது வார்டில் பாலா என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தது மாற்றப்பட்டு இந்த வார்டில் தற்போது கோகுல வாணி என்பவர் போட்டியிடுகிறார். அதே போல அம்பாசமுத்திரம் நகராட்சியில் 5 வது வார்டில் போட்டியிட திமுகவின் கூட்டணி கட்சியான இந்திய கம்னியூஸ்ட் கட்சிக்கு இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது, அந்த வார்டில் அக்கட்சியினர் போட்டியிட விரும்பாததால் நேற்று அதே வார்டில் திமுகவை சேர்ந்த அழகம்மை என்பவர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளார். 




மேலும் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு நெல்லையில் 3 இடம் ஒதுக்கப்பட்டு இருப்பதால் அதிருப்தி அடைந்த நெல்லை மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கரபாண்டியன் பரபரப்பு பேட்டி ஒன்றை கடந்த ஓரிரு நாட்களுக்கு முன் அளித்தார். நாங்கள் கேட்ட வார்டுகளும் கூடுதல் இடங்களும்  ஒதுக்கப்படாததால் நாங்கள் 3 வார்டுகளில் போட்டியிட போவதில்லை என்றும், கட்சி தலைமை முடிவு எடுத்தால்  அனைத்து வார்டுகளிலும் தனித்து போட்டியிடுவோம் எங்களுக்கு தன்மானமே பெரிது என்று பேசியிருந்தார். இந்த சூழலில் மேலிட உத்தரவு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொடுத்த இடங்களில் போட்டியிட கட்சி தலைமை கூறியதால் வேறு வழியின்றி இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக அக்கட்சியினை சேர்ந்தவர் தெரிவிக்கின்றனர். 




தேர்தலில் போட்டி, தொழில் பகை காரணமாக சொந்த கட்சியை சேர்ந்த அருண் பிரவீன் என்பவர் கடந்த 28 ஆம் தேதி திமுக பிரமுகர் பொன்னுதாஸ் என்பவரை வெட்டி கொலை செய்தார், இந்த சம்பவத்தில் பொன்னுதாஸின் தாயார் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவதால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை சம்பவம் அரங்கேறியது தெரிய வந்தது, இந்த சூழலில் மகனின் விருப்பப்படி பொன்னுதாஸின் தாயார் பேச்சியம்மாள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். மேலும் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் திருநெல்வேலி மாநகராட்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இடம் ஒதுக்கப்படாத நிலையில் விசிக கட்சியின் நெல்லை மாநில இளைஞரணி துணைச் செயலாளர் எம்சி கார்த்திக் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மொத்தத்தில் நெல்லை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பலமுனை போட்டி நிலவுவதால் மிகுந்த எதிர்பார்ப்புகளோடு தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கி உள்ளது.