நீண்ட இழுபறிக்குப் பிறகு திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் ப்ரூஸ் என்பவர் அறிவிக்கப்பட்டு உள்ளார். எனினும் மயிலாடுதுறைக்கு இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.  


2024ஆம் ஆண்டு நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை நான்கு முனைப் போட்டியில் களத்தில் உள்ளன.


திமுக தலைமையில் காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளும் அதிமுக தலைமையில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிடுகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின்கீழ் பாமக உள்ளிட்ட கட்சிகள் களம் காண்கின்றன. 


கூட்டணிக் கட்சிகள் இறுதி செய்யப்பட்டு, தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்பட்டு, வேட்பாளர்களும் இறுதி செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டனர். வேட்பாளர்கள் மனுத்தாக்கலும் செய்து வருகின்றனர்.


திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு


எனினும் காங்கிரஸ் கட்சியில் மட்டும் இதுவரை வேட்பாளர்களை முழுமையாக அறிவிக்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணியில் 9 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ், முதல்கட்டமாக 7 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து இருந்தது. இந்த நிலையில், நீண்ட இழுபறிக்குப் பிறகு திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் ப்ரூஸ் என்பவர் அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். 


எதிர் வேட்பாளர்கள் யார் யார்?


திருநெல்வேலி தொகுதியில் அதிமுக சார்பில் ஜான்சி ராணி என்பவர் போட்டி இடுகிறார். முன்னதாக ஆர்.கே.நகரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட சில்மா முத்துச் சோழன் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், அவர் மாற்றப்பட்டார். அதேபோல பாஜக கூட்டணியில் நெல்லை வேட்பாளராக அக்கட்சியின் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் களம் காண்கிறார். 


விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் அறிவிப்பு


எனினும் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட உள்ள காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.  அதே நேரத்தில் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலுக்கு தாரகை கத்பர்ட் என்னும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளார்.


இதையும் வாசிக்கலாம்: DMK vs AIADMK vs BJP vs NTK: மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் 4 முனைகளில் போட்டியிடும் 160 வேட்பாளர்கள் யார் யார்? இதோ முழு பட்டியல்!