NDA Or INDIA BYpolls: நாட்டின் 7 மாநிலங்களில் நடைபெறும் இடைத்தேர்தலில் பாஜக தலைமையிலான NDA கூட்டணியை, எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணி வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
7 மாநிலங்களில் இடைத்தேர்தல்:
நாட்டின் ஏழு மாநிலங்களில் உள்ள 13 சட்டசபை தொகுதிகளில் நடைபெறும், இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. வாக்கு எண்ணும் பணிகள் ஏற்கனவே தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக தனிப்பெரும்பான்மையை இழந்து கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. அதேநேரம், 240 இடங்களை வென்று எதிர்க்கட்சிகள் வலுவாக உள்ளன. இந்த சூழலில் நடைபெறும் முதல் தேர்தல் என்பதால், இதன் முடிவுகள் மீது பெரும் எதிர்பார்ப்புகள் நிலவுகிறது.
அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்:
- பீகார், மேற்கு வங்கம், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
- மேற்கு வங்கத்தில் ராய்கஞ்ச், ரணகாட் தக்சின், பாக்தா மற்றும் மணிக்தலா ஆகிய சட்டமன்றத் தொகுதிகளிலும், இமாச்சலப் பிரதேசத்தில் டேஹ்ரா, ஹமிர்பூர் மற்றும் நலகர் சட்டமன்றத் தொகுதிகளிலும், உத்தரகாண்டில் பத்ரிநாத் மற்றும் மங்களூர் சட்டமன்றத் தொகுதிகளிலும், பஞ்சாபில் மேற்கு ஜலந்தர் சட்டமன்றத் தொகுதியிலும், பீகாரில் ரூபாலி சட்டமன்றத் தொகுதியிலும், தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி மற்றும் மத்திய பிரதேசத்தில் அமர்வாரா சட்டமன்றத் தொகுதியிலும் தேர்தல் நடைபெறுகிறது
- தேர்தல் நடைபெறும் 7 மாநிலங்களில் நான்கு மாநிலங்களில் I.N.D.I.A. கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. மீதமுள்ளவை BJP அல்லது NDA அரசாங்கத்தைக் கொண்டுள்ளன.
- மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுக்குமே கடும்போட்டி நிலவுகிறது. 2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் ஆளும் கட்சி மணிக்தலா தொகுதியையும், ராய்கஞ்ச், ரணகத் தக்ஷின் மற்றும் பாக்தா ஆகிய இடங்களை பாஜகவும் வென்றது. பின்னர் பாஜக எம்எல்ஏக்கள் திரிணாமுல் கட்சிக்கு மாறினர்.
- தமிழகத்தின் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில், ஏப்ரல் 6-ம் தேதி திமுக சட்டமன்ற உறுப்பினர் என் புகழேந்தியின் மறைவால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரான அன்னியூர் சிவா, பாட்டாளி மக்கள் கட்சியின் சி. அன்புமணி எதிர்த்து போட்டியிடுகிறார்.
- பிறமாநிலங்களில் கட்சி தாவல், சட்டமன்ற உறுப்பினர்கள் உயிரிழந்தது போன்ற காரணங்களால், இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அங்கும் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த சில மணி நேரங்களில் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.