மத்தியில் ஆளும் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து போட்டியிடும் சிறிய கட்சிகளுக்கு, அவர்கள் கேட்ட சின்னத்தை உடனடியாக வழங்கிய இந்தியத் தேர்தல் ஆணையம், இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அவர்கள் கேட்கும் சின்னத்தை வழங்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.


தமிழ்நாட்டில் தேர்தல் களம் களைகட்டி வருகிறது. 2019 தேர்தலில் களம் கண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி 2024 தேர்தலில் இரண்டாக உடைந்துள்ளது. பாஜக தலைமையின்கீழ் பாமக, தமாகா, அமமுக, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புதிய நீதிக் கட்சி, அதிமுக தொண்டர் உரிமை மீட்பு அணி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.


திமுக கூட்டணி 2019 மக்களவைத் தேர்தலில் இருந்த கட்சிகளை அப்படியே தக்க வைத்துள்ளது. திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக, கொமதேக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் களம் காண்கின்றன.


அதேபோல அதிமுக கூட்டணியில் அதிமுக, தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் போட்டியிட உள்ளன. எப்போதும்போல நாம் தமிழர் கட்சி, தனித்துக் களம் காண்கிறது.



கேட்ட சின்னம் கிடைத்தது


இந்த நிலையில், பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு, ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்கள் ஏற்கெனவே கோரி இருந்தபடி சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.


அதேபோல அமமுகவுக்கு திருச்சி, தேனி ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் குக்கர் சின்னத்தில் டிடிவி தினகரன் போட்டியிட்டு, சின்னத்தை பிரபலப்படுத்தி இருந்தார். எனினும் அமமுகவுக்கு முந்தைய தேர்தலில் குக்கர் சின்னம் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு மட்டும் அவர்கள் கேட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.




திமுக கூட்டணியில் என்ன நிலை?


இதற்கிடையே திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று இந்தியத் தேர்தல் ஆணையம் கைவிரித்துள்ளது. 2 இடங்களில் போட்டியிட்டால் மட்டுமே சின்னம் வழங்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.


ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடும் மதிமுக உயர் நீதிமன்றத்தை நாடிய நிலையில், பம்பரம் சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் மதிமுகவால் பம்பரம் சின்னத்தில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


இதற்கிடையே இரு தொகுதிகளில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் அவர்கள் கேட்கும் பானை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை. இதனால் விசிக டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியது. எனினும் 1 சதவீதத்துக்குக் குறைவாகவே வாக்குகளைப் பெற்றதால், சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. 



நாம் தமிழருக்கும் கிடைக்காத சின்னம்


அதேபோல தனித்துக் களம் காணும் நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு வந்தது. எனினும் பாரதி மக்கள் ஐக்கிய கட்சி என்னும் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டு விட்டதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்தது. புதிதாக மைக் சின்னத்தையும் ஒதுக்கியது. இதை எதிர்த்து நாம் தமிழர் கட்சி நீதிமன்றத்தை நாடிய நிலையிலும், சின்னம் கிடைக்கவில்லை. 


ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பா?


பாஜக கூட்டணிக் கட்சிகளின் கண்ணில் வெண்ணெய் வைத்து, திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் கூட்டணிக்கு சுண்ணாம்பு வைப்பதா என்று இந்திய தேர்தல் ஆணையத்தை நோக்கிக் கேள்விகள் எழுந்துள்ளன.


ஏற்கெனவே அமலாக்கத் துறை, சிபிஐ, இந்தியத் தேர்தல் ஆணையம் ஆகிய தன்னாட்சி அமைப்புகள் மத்திய அரசின் கைப்பாவை ஆகச் செயல்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.