கோவை நாடாளுமன்ற தொகுதியில் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் தொடர்பான பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். கடந்த வாரம் துவங்கி வேட்பு மனுத்தாக்கல் இன்று நிறைவடைய உள்ளது. கோவையில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிங்கை ராமசந்திரன், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கலாமணி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் வேட்பு மனு தாக்கலின் இறுதி நாளான இன்று பாஜக மற்றும் திமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோனியம்மன் கோவிலில் சாமி கும்பிட்ட பின்னர் அண்ணா சிலையில் இருந்து 1000க்கும் மேற்பட்டோருடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வாக்கு சேகரிப்பு
அதேபோல் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று காலை வழிபாடு செய்த பின்னர் பரப்புரையை துவக்கினார். அப்போது அமைச்சர் டிஆர்பி ராஜா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர். பின்னர் மருதமலை பகுதியில் உள்ள பொதுமக்களிடம் கணபதி ராஜ்குமார் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கேட்டு வாக்குகளை சேகரித்தார். மருதமலை பகுதியில் கணபதி ராஜ்குமார் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, உடன் இருந்த தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவிற்கு, திமுக ஐடி விங் மருதமலை பகுதி ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ் ஒரு ஆட்டுக்குட்டியை பரிசாக வழங்கினார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை சூசகமாக ஆட்டுக்குட்டி என சொல்லும் வகையில் ஆட்டுக்குட்டியை பரிசாக வழங்கியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கோவைக்கு பாஜக அண்ணாமலை அறிவிக்கப்பட்டவுடன், அமைச்சர் டிஆர்பி ராஜா தேர்தல் முடிந்தவுடன் கோவை மக்களுக்கு சுவையான மட்டன் பிரியாணி ரெடியாக உள்ளது என்று கூறினார். அது சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆனது. அது போல் அமைச்சருக்கு ஆட்டுக்குட்டி வழங்கியது டிரண்டிங் ஆகி வருகின்றது.
டெபாசிட் இழப்பார்கள்
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய கணபதி ராஜ்குமார், “நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு அரசாங்கத்தின் திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்து வைத்து வாக்கு சேகரித்து வருகிறோம். பாஜக ஆட்சி காலத்தில் பொதுமக்களுல்லு நலத்திட்டங்கள் எதுவும் செய்யவில்லை. தொழில்துறை வளர்ச்சி, விமான நிலைய விரிவாக்கம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் இந்த தேர்தலில் டெபாசிட் இழப்பார்கள். திமுக கோயம்புத்தூரில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெறும்” எனத் தெரிவித்தார். பின்னர் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, ”10 வருடமாக இரண்டு ஆளும் தரப்பினர் என்ன கிழித்தார்கள்? களத்தில் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும், சாதனை திட்டங்களை விளக்கி வாக்கு சேகரித்து வருகிறோம். இந்த தேர்தலில் எதிர்க்கட்சியினர் டெபாசிட் இழப்பார்கள். இந்த இனத்தை அழிக்க வேண்டும் என்று நினைக்கும் பாஜக மற்றும் பாஜகவுக்கு அடிமையாக இருக்கும் அதிமுகவை ஒழிக்க வேண்டும். பாஜக, அதிமுகவிற்க்கு எதிரான போராக பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் மிகப்பிரமாண்டமான இதுவரை வரலாறு காணாத வெற்றி பெறுவோம்” எனத் தெரிவித்தார்.