திமுக கூட்டணி கட்சியில் அதிகாரப்பூர்வமாக இந்தியன் யூனியன் மூஸ்லீம் கட்சி வேட்பாளராக நவாஸ் கனி அறிவிக்கப்பட்டுள்ளார்.


ராமநாதபுரம் தொகுதி சிட்டிங் எம்பி நவாஸ் கனியை பற்றி பல்வேறு சர்ச்சைக்குரிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தது. அதிலும் கடந்த நான்காம் தேதி ராமநாதபுரத்தை அடுத்த புது மடம் பகுதியில் அவரை கடுமையாக விமர்சனம் செய்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்ததை யாரும் மறக்க முடியாது. அதில்,"ராமநாதபுரம் முஸ்லீம் லீக் MP நவாஸ் கனி அவர்களே ! புதுமடத்தில் நுழையாதீர்கள்!''. '' 2019 எம்.பி தேர்தலுக்கு வாக்கு சேகரிக்க வந்தீர்கள்! வெற்றி பெற்றதும் புதுமடத்தை மறந்தீர்கள்! சொல்லும் படியாக புதுமடத்திற்கு எதுவுமே செய்யவில்லை! ஐந்தாண்டு முடிந்து விட்டது!'' ''ஓரிரு மாதத்தில் மீண்டும் தேர்தல் வருவதால், உங்கள் முகத்தை மக்களுக்கு நியாபகப்படுத்த, தேர்தல் விளம்பரத்திற்காக மீண்டும் புதுமடம் வருகிறீர்கள்!''"மக்களை ஏமாற்றும் அரசியல் வியாபாரி MP நவாஸ் கனி அவர்களே! புதுமடம் மக்கள் ஏமாளிகள் அல்ல! மனசாட்சி ஒன்று இருந்தால் புதுமடத்தில் நுழையாதீர்கள். நாங்கள் வரவேற்க மாட்டோம்.'' ''ஊர் பொதுமக்கள், புதுமடம்.'' இவ்வாறு அந்த சர்ச்சைக்குரிய போஸ்டரில் அச்சிடப்பட்டிருந்தது.


இதனைத்தொடர்ந்து, கடந்த வாரம் 'கண்டா வரச் சொல்லுங்க'எங்க தொகுதி MP ய எங்கேயும் காணல' என்றும், ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி மக்கள் என அச்சிடப்பட்டு கேள்விகுறியோடு உள்ள  சுவரொட்டிகள் பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் ஒட்டப்பட்டிருந்தது.




'களமிறங்கிய ஆதரவாளர்கள்'


தொடர்ந்து எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருவதைக் கண்டு ஆவேசம் அடைந்த நவாஸ் கனியின் ஆதரவாளர்கள், கடந்த இரு தினங்களுக்கு முன் 'மீண்டும் வேண்டும் நவாஸ் கனி' என்ற சுவரொட்டிகள் மூலம் அதற்கு காரணமாக அவர் செய்த நலத்திட்டங்களை குறிப்பிட்டு அச்சிட்டு பதிலடியாக வால்போஸ்டர் ஒட்டியிருந்தனர். இந்த நிலையில் மீண்டும் அவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக ராமநாதபுரம் தொகுதியில் போட்டி இடுகிறார் என இன்று  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது அவருடைய ஆதரவாளர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.


நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முழுவீச்சில் நடத்தி வருகிறது.அந்த வகையில், சமீபத்தில் திமுக கூட்டணி கட்சியனா இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியை திமுக ஒதுக்கி உள்ளது. இந்த சூழ்நிலையில் திமுக கூட்டணியின் முதல் வேட்பாளராக ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் இதுகுறித்து அறிவித்துள்ளார். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தி.மு.க.வுடன் கொள்கை அடிப்படையில் கூட்டணி வைத்திருக்கிறது. சீட்டுக்காகக் கூட்டணி இல்லை. கேட்ட சீட்டு கிடைக்கவில்லை என்றால் கூட்டணியிலிருந்து விலகமாட்டோம். அவர்களும், விடவும் மாட்டார்கள் என்று கூறியிருந்தார் காதர் மொய்தீன். அவரது நம்பிக்கை வீண் போகவில்லை.


இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஏற்கனவே வெற்றி பெற்ற ராமநாதபுரம் தொகுதியை ஒதுக்கியது. தற்போது ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் இதுகுறித்து அறிவித்துள்ளார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி போட்டியிடுகிறார்.


'யார் இந்த நவாஸ் கனி'


ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா சாயல்குடி அருகில் உள்ள குருவாடி என்னும் ஊரில் 14.05.1979 ஆம் ஆண்டு பிறந்தவர். காதர் மீரா கனி - ரம்ஜான் பீவி தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் கா. நவாஸ்கனி. பள்ளிப்படிப்பை முடித்த பிறகு படிப்படியாக உயர்ந்து நின்று எஸ்.டி. கூரியர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆனார்.


கடந்த 2011 ஆம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலையமான சென்னை , காயிதே மில்லத் மன்ஸிலில் நடைபெற்ற "தி டைம்ஸ் ஆப் லீக்" என்ற ஆங்கில பத்திரிகை துவக்க விழாவில் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் அவர்கள் முன்னிலையில் கா. நவாஸ்கனி தனது 32 வது வயதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.


2011ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அஸ்ஸலாம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழுவில் முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை அறங்காவலராகவும் அதைத் தொடர்ந்து மாநில கௌரவ ஆலோசகராகவும் கடந்த 15 ஆண்டுகளாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் சேவையாற்றி வருகின்றார்.இவர் கடந்த நாடாளுமன்ற  தேர்தலில் ராமநாதபுரத்தில்  போட்டியிட்டு எம்.பியாக வெற்றி பெற்றவர்.


ராமநாதபுரம் தொகுதி மக்களுக்கு அறிமுகமான நவாஸ் கனியை மீண்டும் வேட்பாளராக களமிறக்குகிறது இந்திய யூனியன் முஸ்லீம் லீக். திமுக கூட்டணியில் முறையாக அறிவிக்கப்பட்ட முதல் வேட்பாளர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.