உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா இன்று காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 


அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின், எதிர்க் கட்சித் தலைவர் இபிஎஸ், நடிகர் ரஜினிகாந்த், நடிகர் கமல் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் காலையிலேயே ஓட்டு போட்டனர்.


ஓட்டு போடவில்லை என்று சொல்வதில் மரியாதையில்லை


அந்த வகையில் சென்னை ஸ்டெலா்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை செலுத்தினார் நடிகர் ரஜினிகாந்த். வாக்களிக்கச் செல்வதற்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "வாக்குரிமை உள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும். ஓட்டு போடவில்லை என்று சொல்வதில் மரியாதையில்லை, கவுரவுமும் இல்லை" என்று தெரிவித்தார்.






நடிகர் ரஜினியின் தொகுதி மத்திய சென்னையின்கீழ் வருகிறது. இந்தத் தொகுதியில் திமுக சார்பில் தயாநிதி மாறன் நிற்கிறார். அதிமுக கூட்டணியில் தேமுதிகவின் பார்த்தசாரதி நிற்கிறார். பாஜக சார்பில் வினோஜ் பி செல்வம் களம் காண்கிறார்.


பெருமைக்கு உரிய விஷயம்


இந்த நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரான வினோஜ் செல்வம், எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ’’சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று வாக்களித்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் எனது பெயர் இருந்தது பெருமைக்குரிய விஷயம்’’ என்று வினோஜ் செல்வம் தெரிவித்துள்ளார்.


தற்போது தமிழ்நாடு முழுவதும் வாக்களிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்பதால், வாக்களிக்காத வாக்காளர்கள் தங்களது வாக்குகளை விரைந்து சென்று வாக்களித்து வருகின்றனர். மதியம் 3 மணி வரை தமிழ்நாட்டில் சுமார் 51 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.