BJP Fall In UP: மோடி -யோகியின் இரட்டை இன்ஜின் ஆட்சி, ராமர் கோயில் என பலவற்றை முன்னிலைப்படுத்தியும், உத்தரபிரதேசத்தில் பாஜக தேர்தலில் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.


உத்தரபிரதேசத்தில் சறுக்கிய பாஜக:


நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பு வரை, பாஜக கூட்டணி 400 இடங்களை கைப்பற்றும், அக்கட்சி மட்டுமே தனிப்பெரும்பான்மை பெறும் என மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர் பேசி வந்தனர். அதற்கு முக்கிய காரணம் நாட்டிலேயே அதிகபட்சமாக 80 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசம் மாநிலம் மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை தான். மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் என இரட்டை இன்ஜின் ஆட்சி, நீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பிரமாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோயில், தங்களுக்கும் பெரும் வெற்றியை பெற்று தரும் என பாஜக நம்பியது. ஆனால், யாருமே எதிர்பாராத விதமாக கடந்த தேர்தலில் 64 இடங்களை வென்ற பாஜக கூட்டணி, நடப்பாண்டு தேர்தலில் வெறும் 33 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. இந்த பெரும் தோல்வி காரணமாகவே அந்த கட்சி தனிப்பெரும்பான்மையை இழந்து, கூட்டணி கட்சிகளை நாடும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.


கைவிட்ட ராமர் கோயில்:


ராமர் கோயில் தேர்தலில் தங்களது வெற்றிக்கு பெரும் பங்காற்றும் என பாஜக கருதியது. ஆனால், ராமர் கோயில் அமைந்துள்ள ஃபைசாபாத் தொகுதியிலேயே பாஜக வேட்பாளர் சமாஜ்வாதி வேட்பாளரிடம் தோல்வியுற்றார். காரணம் ராமர் கோயில் அமைத்துள்ளோம் என்பதை தாண்டி வேறு எந்த எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் பாஜகவின் அங்கு பரப்புரை மேற்கொள்ளவில்லை. ஆனால், இன்னும் அந்த மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை, அக்னிவீர் திட்டத்திற்கு மற்றும் ஏழ்மை போன்ற முக்கிய பிரச்னைகள் நிலவுகிறது. அவற்றின் மீது கவனம் செலுத்தாமல், ராமர் கோயில் மீது மட்டுமே முழு கவனம் செலுத்தியதும் பாஜகவின் தோல்விக்கு காரணமாக கருதப்படுகிறது.


இரட்டை இன்ஜின் ஆட்சி தோல்வி..!


பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி மற்றும் புல்டோசர் பாபா என அழைக்கப்படும் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் மாநிலத்தில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இரட்டை இன்ஜின் தொடர்பான பரப்புரை ஓவர்டோஸ் ஆனதாகவும், யோகி ஆதித்யநாத்தின் ஆட்சிக் காலம் பாதியை கடந்துவிட்டதாலும் வாக்காளர்களுக்கு பாஜக மீதான நம்பிக்கை சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. மோடியை விட பிரபலமாவதால், மக்களவை தேர்தல் முடிந்ததுமே யோகி ஆதித்யநாத் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பரப்புரையில் ஈடுபட்டனர். இது பாஜகவில் உட்கட்சி மோதல் உள்ளது என்பது போன்ற எண்ணத்தை  பொதுமக்களிடையே கூறப்படுகிறது. தாகூர் போராட்டங்கள் போன்ற மாநிலத்தின் உள்விவகாரங்களை சமாளிக்க மாநில அரசு போதிய நடவடிக்கைகளை எடுத்தாலும், மத்திய அரசு அதனை சரியாக கையாளவில்லை எனவும் கூறப்படுகிறது. பல்வேறு நலத்திட்டங்களை பாஜக கொண்டு வந்தாலுமே, சிறுபான்மை மக்களை அவர்களால் கவர முடியவில்லை என கூறப்படுகிறது. 


மோசமான வேட்பாளர்கள் தேர்வு:


பல சிட்டிங் எம்.பி.க்களுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு இருந்தபோதிலும், ஆய்வு முடிவுகளை தவிர்த்து பாஜக தலைமை அவர்களை மீண்டும் வேட்பாளர்களாக களமிறக்கியது. அதன் விளைவாக அவர்கள் மோசமான தோல்வியை பதிவு செய்தனர். எதிர்ப்பு இருப்பதை கருத்தில் கொண்டு குறைந்தபட்சம் 30-35 சதவீத சிட்டிங் எம்.பி.க்களுக்கு வாய்ப்பு  மறுக்க பாஜக ஆரம்பத்தில் முடிவு செய்தது, ஆனால் அவர்களில் 14 பேரை மட்டுமே மாற்றியது குறிப்பிடத்தக்கது.


தாக்கத்தை ஏற்படுத்தாத மாயாவதி:


மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி, மாநிலத்தில் ஒரு காலத்தில் பலமாக இருந்ததாலும் இந்தத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.  2014 லோக்சபா தேர்தலிலும் உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெறவில்லை. ஆனால் 2019 தேர்தலில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைத்து போராடி 10 இடங்களுடன் வலுவாக மீண்டும் வந்தது. இம்முறை தனித்துச் சென்றதால் தோல்வி ஏற்பட்டது. கடந்த தேர்தலில் 19.43 சதவிகித வாக்குகளை பெற்ற மாயவதியின் கட்சி, இந்த முறை பல இடங்களில் ஒற்றை இலக்கங்களுக்கு சரிந்தது. இது I.N.D.I.A. கூட்டணிக்கு சாதகமாகவும், பாஜக பெரும் பின்னடைவாகவும் அமைந்தது.


உள்ளூர் பிரச்னைகள்:


விவசாயிகளின் துயரம், பொருளாதாரக் கவலை, வேலையின்மை மற்றும் அக்னிவீர் திட்டத்திற்கு எதிரான எதிர்க்கட்சிகளின் பரப்புரை, பெரும்பாலான இளைஞர்களிடையே பாஜகவுக்கு எதிராக கோபத்தை அதிகப்படுத்தியது. இதனிடையே, மாநிலத்தில் முறையான கூட்டணியை கட்டமைக்காததும் தோல்விக்கு காரணமாக கருதப்படுகிறது.