கட்சி கட்டமைப்பில் மாற்றம் இருக்கும் என்றும், தேர்தலில் சரியாக பணியாற்றாத நிர்வாகிகள், உறுப்பினர்கள் விரைவில் நீக்கப்படுவார்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.


சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில், சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் அடைந்த தோல்வி, வாக்கு சதவீதம் குறைந்தது, நிர்வாகிகளின் தேர்தல் பணி ஆகியவை குறித்து அதன் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நேற்று விவாதிக்கப்பட்டது. இதில், முக்கிய நிர்வாகிகள், வேட்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் கமல்ஹாசன் பேசுகையில், மக்கள் நீதி மய்யத்தின் சக்கரம் நிற்காது. அது சுற்றிக்கொண்டே இருக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் கவனம் செலுத்த வேண்டும். இப்போது செய்த தவறில் இருந்து நம்மை திருத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.


மேலும், உடனடியாக கட்சியின் கட்டமைப்பில் மாற்றங்கள் வரும் என்றும், அமைப்பு ரீதியாக கட்சியை பலப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார். தேர்தல் பணியாற்றதவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். அத்துடன், மக்கள் நீதி மய்யத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும் புதிய முடிவுகளை தான் விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் கமல்ஹாசன் கூறினார்.




இந்த ஆலோசனை கூட்டத்திற்கு அக்கட்சியின் துணைத் தலைவர் பொன்ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், ”தேர்தல் பரப்புரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் குறைவான சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டதே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்ததே தோல்விக்கு முக்கிய காரணமாகும். தனித்து போட்டியிட்டிருந்தால் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கலாம். அனைத்து தொகுதி வேட்பாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடைபெறும். வெற்றி என்ற புள்ளியை தொடுவதே மக்கள் நீதி மய்யத்தின் இலக்கு. 234 தொகுதியிலும் போட்டியிடுவதற்கான போதிய பொருளாதார வசதி இல்லை. கட்சியின் தொண்டர்களை கடன்காரர்களாக மாற்ற கூடாது என்பதற்காகவே கூட்டணி வைத்தோம். ஆனால், அது கைகொடுக்கவில்லை. தற்போது வாங்கிய 12 லட்சம் வாக்குகளை விட 10 மடங்காக உயர்த்த மீண்டும் பணி புரிவோம்” என்று கூறினார்.


நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்  51 ஆயிரத்து 481 வாக்குகள் பெற்று, வானதி சீனிவாசனிடம் தோல்வி அடைந்தார். 53 ஆயிரத்து 209 வாக்குகள் பெற்ற வானதி முதலிடம் பிடித்தார். காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாருக்கு மூன்றாவது இடம் கிடைத்தது.


பெரும்பாலும் தான் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் தான் கமலஹாசன் கவனம் செலுத்தினர். அங்கு தங்கி அவர் பிரசாரம் செய்தார். இதனால் பிற பகுதிகளுக்கு அவரால் பிரசாரம் செய்ய முடியவில்லை. இதுவும் மக்கள் நீதி மய்யத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் தங்களின் தவறுகளை திருத்திக் கொள்ள அக்கட்சி முடிவு செய்துள்ள நிலையில், விரைவில் புதிய அறிவிப்புகளை மக்கள் நீதி மய்யம் வெளியிடும் என தெரிகிறது.