கோவை மசக்காளிபாளையம் பகுதியில் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு 32 வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது பேசிய செந்தில்பாலாஜி, ”மாநகராட்சி தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் விரக்தியில் இருப்பார்கள். ஆனால் தேர்தல் முடிந்ததும் அவர்களுக்கு அரசுப் பொறுப்புகள் வழங்கப்படும். கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவையில் தொகுதிகளை இழந்ததை போல் நடக்காமல் தடுக்க பகுதி செயலாளர்கள் தங்களது பூத்களை பார்த்துக் கொள்ள வேண்டும். கடந்த கால அனுபவங்களை கருத்தில் கொண்டு தோழமை கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.
கோவை மாவட்டத்தில் 811 இடங்களுக்கு 3500 பேர் விருப்ப மனு தாக்கல் செய்ததால் பலருக்கு சீட் கொடுக்க முடியவில்லை. சீட் கிடைக்காதவர்கள் வீடுகளுக்கே சென்று வேட்பாளர்கள் இணைந்து பணியாற்ற அழைப்பு விடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
இதற்கு முன்னதாக பொள்ளாச்சியில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு சென்ற அமைச்சர் செந்தில் பாலாஜி காரை திமுகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 25 வார்டில் தி.மு.க. சார்பில அசோக்குமார் என்பவரது மனைவி பாலகிருஷ்ணவேணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் நான்கு மணி நேரத்தில் பாலகிருஷ்ணன் வேணி மாற்றப்பட்டு பானுமதி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் அவரது ஆதரவாளர்கள் அமைச்சர் செந்தில்பாலாஜி காரை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் திமுகவினர் சமரசப்படுத்துயதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. கூட்டணி கட்சிகளுக்கு வார்டு ஒதுக்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி அடைந்த திமுகவினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
வருகின்ற 19ம் தேதி நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் உள்ள 811 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக மொத்தம் 4,572 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் போட்டியிட 1130 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
கோவை மாநகராட்சியில் திமுக 74 வார்டுகளில் நேரடியாக போட்டியிடுகிறது. மீதமுள்ள 26 இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 வார்டுகளும், மதிமுகவிற்கு 3 வார்டுகளும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல 93 வார்டுகளில் அதிமுக போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு வார்டில் போட்டியிடுகிறது.