பாமக வோடு கூட்டணி வைப்பதற்காகவே நீதிமன்றம் சென்றால் நிறைவேறாது என தெரிந்தும் 10.5  சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கினோம் என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேசினார். இனி இந்த மக்கள் அவர்களை நம்ப மாட்டார்கள் என தர்மபுரியில் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பேட்டியளித்தார்.

 

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியின் இந்தியா கூட்டணியின் சார்பில் திமுகவுக்கு  ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் திமுக வேட்பாளராக வழக்கறிஞர் ஆ.மணி வேட்பாளராக போட்டியிடுகிறார். தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியின் தேர்தல் பணிமணையை தமிழக உழவர் மற்றும் வேளாண் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது:

 

இந்தியா கூட்டணியின் சார்பில் வழக்கறிஞர் ஆ.மணி தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். நாங்கள் ஒற்றை அணியாக, கொள்கை கூட்டணியாக இந்த தேர்தலை சந்திக்க உள்ளோம். தமிழ்நாடு அரசில் திமுக தலைவர், முதலமைச்சர் செய்துள்ள சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிப்போம். எதிர்முனையில் உள்ள கூட்டணிகள் இரண்டாக பிரிந்துள்ளது. ஆனால் கடந்த தேர்தலில் அதிமுக-பாமக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட்டத்தில் பேசியபோது, 10.5% இட ஒதுக்கீடு கொடுத்து தான், பாமகவும் அதிமுகவும் வெற்றி பெற்றது. ஆனால் இந்த 10.5% இட ஒதுக்கீடு என்பது நீதிமன்றத்திற்கு போனாலும் அது செல்லுபடி ஆகாது என தெரிந்து தான், நாங்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே அறிவித்தோம் என்று தற்பொழுது சி.வி. சண்முகமே உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். தற்பொழுது பூனை குட்டி வெளியே வந்துள்ளது. இனியும் இந்த பகுதி வன்னியர் சமூக மக்கள் இவர்களை நம்ப மாட்டார்கள். 



 

பாமக என்பது சீசனுக்கு வந்து செல்லும் பறவை போல, தேர்தலுக்கு மட்டும் தான் வருவார்கள். தருமபுரியில் அன்புமணி அல்ல, ராமதாஸ் அல்ல, அவர்கள் குடும்பமே இங்கு வந்து போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது. அவர்களை இந்த மக்கள் நம்ப மாட்டார்கள். திமுக வேட்பாளர் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். தருமபுரி மாவட்டத்தில் 75 சதவீத மக்கள் அரசின் திட்டங்களில் பயன் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் ஆதரவு திமுகவுக்கு கிடைக்கும். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் திமுக வெற்றி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

 

தொடர்ந்து இறுதியில் திமுகவிற்கு உதயசூரியன் சின்னத்தில் பத்திரிகையாளர்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என அமைச்சர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளர் அவர்கள் முன்னாள் அமைச்சர் பழனியப்பன், தடகம் சுப்பிரமணி உள்ளிட்ட காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம் என கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.