வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்குகிறது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலானது ஜூன் மாதம் 1ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது.


எதிர்பார்ப்பை கிளப்பிய நாடாளுமன்ற தேர்தல்:


முதற்கட்ட தேர்தலிலேயே தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் கடந்த மார்ச் 20ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.


இந்த நிலையில், முக்கிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில், வடசென்னை மக்களவை தொகுதிக்கான திமுக, அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய சென்றனர்.


அப்போது, தங்களின் வேட்புமனுவைதான் முதலில் வாங்க வேண்டும் என இரு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


தி.மு.க., அ.தி.மு.க. தலைவர்களிடையே வாக்குவாதம்: 


சென்னையில் உள்ள மூன்று மக்களவை தொகுதிகளும் தி.மு.க.வின் கோட்டையாக கருதப்படுகிறது. ஆனால், இந்த முறை சென்னையில் உள்ள தொகுதிகளை கைப்பற்ற அதிமுக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


தி.மு.க.வின் கலாநிதி வீராசாமிக்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் மனோ களம் இறங்குகிறார். இச்சூழலில், திமுக, அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்ய ஒரே நேரத்தில் சென்று, தங்களின் மனுவை தான் முதலில் வாங்க வேண்டும் என தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டனர்.


திமுக வேட்பாளருடன் அமைச்சர் சேகர்பாபுவும், அதிமுக வேட்பாளருடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றனர். அப்போது, வேட்புமனு தாக்கல் செய்ய தாங்கள் தான் முதலில் டோக்கன் பெற்றோம் என்றும், எனவே தங்களது வேட்புமனுவை தான் முதலில் வாங்க வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.


இதற்கு, எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "நாங்கள் தான் முதலில் வந்தோம். வேட்பாளர் தான் டோக்கன் வாங்க வேண்டும். ஆனால் திமுக வை சேர்ந்த வேறொரு நபர் மூலம் டோக்கன் பெற்றது போர்ஜரி. எனவே எங்களது வேட்புமனுவை தான் வாங்க வேண்டும்" என முறையிட்டார். இதனால் இருவர் தரப்பும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது.


இதனால், யாரின் வேட்புமனுவை பெறுவது என்பதில் தேர்தல் அதிகாரிக்கு குழப்பம் ஏற்பட்டது. இந்த பிரச்னைக்கு நடுவே, திமுகவின் மாற்று வேட்பாளரான கலாநிதி வீராசாமியின் மனைவி ஜெயந்தியின் வேட்புமனுவை முதலில் பெறுவதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.


அதன்படி, ஜெயந்தியின் வேட்புமனுவை பெற்றார். பின்னர், அதிமுக வேட்பாளர் மனோவின் வேட்புமனுவை பெற்றார். அதையடுத்து, திமுக வேட்பாளர் கலாநிதியின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரி பெற்றுக்கொண்டார். இதனையடுத்து திமுக - அதிமுக இடையேயான வாக்குவாதம் முடிவுக்கு வந்தது.