தேர்தலுக்கு தேர்தல் பாமகவினர் வேடந்தாங்கலுக்கு வரும் சீசன் பறவைகள் போல இடம் மாறி வருகின்றனர் என தருமபுரியில் அமைச்சர் பன்னீர்செல்வம் விமர்சித்தார்.
தருமபுரியில் நாளை இந்தியா கூட்டணி சார்பில் தருமபுரி நாடாளுமன்ற தொகுயில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணி மற்றும் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிக்கும் பிரச்சார பொதுக்கூட்டம், தருமபுரி அடுத்த தடங்கம் பகுதியில் நடைபெறுகிறது. அந்த பொதுக்கூட்டத்திற்ககான முன்னேற்பாடுகள் நடைபெறும் இடத்தினை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பேசியதாவது:
தருமபுரியில் நாளை கிருஷ்ணகிரி, தருமபுரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் வாக்கு சேகரிக்கும் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக தனி விமானம் மூலம் சேலம் வருகிறார். அங்கிருந்து தருமபுரி பொதுக்கூட்டத்திற்கு வருகிறார். இந்த தேர்தலில் நாங்கள் சாதனைகளை சொல்லியும், கூட்டணி கட்சியின் பலத்தோடு வெற்றி பெறுவோம். தருமபுரி மாவட்டத்திற்கு பல நல்ல திட்டங்களை கொடுத்த முதலமைச்சர் வாக்கு சேகரிக்க வருகிறார்.
இதில் மகளிருக்கான உரிமை தொகை, கட்டணமில்லாத பேருந்து உள்ளிட்ட மக்களுக்கான எண்ணற்ற நலத்திட்டங்களை முதல்வர் செய்துள்ளார். அந்த சாதனைகள், கூட்டணி கட்சிகளின் ஒற்றுமை, வேட்பாளர்களி்ன் உழைப்பு உள்ளிட்டவைகள் திமுகவின் வெற்றி உறுதியாக இருக்கிறது. 40 க்கு 40ம் திமுகவுடையதே, எந்த சந்தேகமும் இல்லை.
தேர்தலுக்கு தேர்தல் பாமகவினர் வேடந்தாங்கலுக்கு வரும் சீசன் பறவைகள் போல, இடம் மாறி வருகின்றனர். ஆனால் திமுக அப்படியல்ல, சீசனுக்கு மாறுகிறவர்கள் அல்ல, தேர்தல்களில் ஒரே கூட்டணி, ஒரே கொள்கையுடன் தொடர்கிறோம். எல்லா தேர்தல்களிலும் கூட்டணியாக இருக்கிறோம். ஆனால் பாமக கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது அதிமுகவினரோடு கூட்டணி, தற்போது வேறு ஒரு கட்சியோட சேர்ந்திருக்கிறார்கள். உள்ளாட்சி மன்ற தேர்தலில் ஒரு கூட்டணி, சட்டமன்ற தேர்தலில் ஒரு கூட்டணி, நாடாளுமன்ற தேர்தலில் ஒரு கூட்டணி என பாமகவினர் மாறிக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் திமுக அப்படியல்ல. ஆனால் பாமகவினர் தங்களை சரணாலயம் எனக் கூறுவது எப்படி என தெரியவில்லை. இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது கிழக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்ரமணி, மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் எம்எல்ஏ மதியழகன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.