விவசாயிகள் பயன்படுத்தும் ஏர்கலப்பை தயாரிப்பில் கொடிகட்டி பறந்த பகுதிகளில் மேலூரும் ஒன்று. இந்தியாவில் பல இடங்களுக்கும் மேலூர் கலப்பை தற்போதும் அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த அளவிற்கு உழைப்பையும், தரத்தையும் கொடுக்கும் கலப்பைகளை மேலூர் உழைப்பாளிகள் வார்த்து வருகின்றனர். இதனால் மேலூரில் அதிகளவு கலப்பை தொழில் பறந்து விரிந்துகிடக்கிறது. அமைச்சர் பூசாரிக் கக்கன் மேலூர் சட்ட மன்ற தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சரவையில் இடம் பிடித்தார்.
தொகுதிக்குள் அரசுக் கலைக்கல்லூரி, மருத்துவமனை, பஞ்சு மில், இணைப்பு சாலை, விவசாய கல்லூரியில் பி.யூ.சி, குடிநீர் திட்டம் என இன்றும் பெயர் சொல்லும் பல திட்டங்களை கொண்டுவந்துள்ளார். எளிமையின் உருவமான கக்கனுக்கு மேலூர் செக்கடியில் சிலை வைத்து மரியாதை செய்துவருகின்றனர். பல்வேறு துறைகளில் அமைச்சராக இருந்த கக்கன் மேலூர் தொகுதிக்கு மிகப்பெரும் அடையாளம்.
மதுரை மாவட்டம் மேலூர் தொகுதி பல்வேறு கிராமங்களை கொண்டது. அதனால் விவசாயம் அதிகளவு செய்யப்பட்ட பகுதியாக இருந்தது. காங்கிரஸ் கோட்டையாக இருந்த மேலூர் தொகுதி தற்போது அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்துவருகிறது. கக்கனுக்கு பின்னால் மேலூரில் பெரிய அளவு திட்டங்கள் கொண்டுவரபடவில்லை. அ.தி.மு.க எம்.எல்.ஏ ஆர்.சாமி 2001 முதல் தொடர்ந்து மூன்று முறை வென்று ஹாட்ரிக் வெற்றி பெற்றார். 2016 தேர்தலில் அ.தி.மு.க.வில் சார்பில் பெரியபுள்ளான் என்ற செல்வம் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது மீண்டும் அ.தி.மு.க.வில் சிட்டிங் எம்.எல்.ஏ பெரியபுள்ளானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் சார்பாக ரவிச்சந்திரன் போட்டியிடுகிறார். பெரியபுள்ளான் மேலூர் தொகுதிக்கு சொல்லும்படியான எந்த திட்டங்களை கொண்டுவரவில்லை என்றாலும் தனது சாதி ஓட்டுகளால் மீண்டும் வெற்றி பெறுவார் என சொல்லப்படுகிறது. காங்கிரஸ் வேட்பாளர் ரவிச்சந்திரன் பெரிய அறிமுகம் இல்லை என்பதால் வெற்றி பெறுவது குதிரைக் கொம்பு தான்.
அமமுக வேட்பாளர் செல்வராஜ் அதிக வாக்குகளை பிரிக்க வாய்ப்பு உள்ளது. எனினும் மேலூர் தொகுதி மீண்டும் அ.தி.மு.க.விற்கு தான் என அடித்து சொல்கின்றனர் இரத்தத்தின் இரத்தங்கள். மறுபக்கம் மேலூர் தொகுதியில் யார் வெற்றி பெற்றாலும் கிரானைட் குவாரிக்கு துணை போவார்கள் என்று அச்சம் தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இது குறித்து கிரானைட் குவாரிகளுக்கு எதிராக பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்திவரும் வழக்கறிஞர் ப.ஸ்டாலின்...," மேலூரில் கிரானைட் கொள்ளை தலைவிரித்த போது 2012 மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா குவாரிகளுக்கு தடை விதித்தார். உச்சநீதிமன்றம் வரை சென்றபோதும் தடை நீங்கவில்லை. சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி போட்ட வழக்கை தொடர்ந்து ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணை கமிஷன் நடைபெற்று முடிந்தது. அதன் அறிக்கை கூட முழுமையாக வெளிவரவில்லை. இந்நிலையில் மேலூரில் உள்ள அரசியல் கட்சியினர் கிரானைட் குவாரியை திறக்க வேண்டும் என பேராசையில் கொப்பளிக்கின்றனர்.
பணத்திற்காக இந்த மண்ணை மீண்டும் கூறுபோட நினைப்பது நியாயமா?. பி.ஜே.பி சார்பாக பேராசிரியர் சீனிவாசன் குவாரியை திறக்க வேண்டும் என போரட்டம் நடத்தினார். தற்போதைய மேலூர் காங்கிரஸ் வேட்பாளர் தொகுதிக்கே சம்மந்தம் இல்லாத கிரானைட் குவாரி ஆதரவாளர்களை சந்தித்தார். மேலூர் பிரச்சாரத்திற்கு வந்த டி.டி.வி தினகரன் கிரானைட் குவாரியை திறக்க ஏற்பாடு செய்வோம் என பேசினார்.
இப்படி எல்லா அரசியல் கட்சியினரும் நேரடியாகவும், மறைமுகமாகவும் கிரானைட் குவாரிக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆனால் மேலூர் மக்கள் குவாரியை திறக்கக் கூடாது என்று உறுதியாக இருக்கின்றனர். எனவே மேலூர் தொகுதியில் யார் வெற்றி பெற்றாலும் சரி கிரானைட் குவாரிகளுக்கும், முதலாளிகளுக்கும் துணை போகக்கூடாது" என்று கேட்டுக்கொண்டார்.