மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்று தங்களது பெரும்பான்மையை எப்படியாவது நிரூபிக்க வேண்டும் என ஒவ்வொரு கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. எந்த கட்சி யாருடன் கூட்டணி வைக்கும், எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதே இங்கே பெரிய எதிர்பார்ப்பை தருகிறது.
இந்தநிலையில், தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள திமுக அரசு, அடுத்து மக்களவை தேர்தலில் போட்டியிட தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் மதிமுக கட்சியும் 2 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
தொகுதி பங்கீடு:
திமுகவுடனான மதிமுக கட்சி தங்களது முதல் கட்ட பேச்சுவார்த்தையை கடந்த 4ம் தேதியும், 2வது கட்ட பேச்சுவார்த்தையும் கடந்த 24ம் தேதியும் நடத்தியது. இந்த தொகுதி பங்கீட்டின் போது சுமுகமான உடன்பாடு எட்டப்படவில்லை. இதன் தொடர்ச்சியாக தொகுதிகளை ஒதுக்குவது பற்றி மீண்டும் இன்று அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.
இதன்படி, திமுகவின் தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு மதிமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட திமுகவின் கூட்டணி கட்சிகள் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு தலைமையிலான பேச்சுவார்த்தை குழுவுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, இந்த மக்களவை தேர்தலில் மதிமுக சார்பில் காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, ஈரோடு, விருதுநகர் மற்றும் திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பட்டியலை திமுகவிடன் கொடுத்துள்ளது. இதையடுத்து, மதிமுகவுடான தொகுதி பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தையில் இன்று மதியத்திற்குள் முடிவு எட்டப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், ஈரோடு தொகுதியில் போட்டியிட்ட மதிமுக உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, இந்த மக்களவை தேர்தலிலும் ஒரு மாநிலங்களவை இடமும் வழங்கபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த முறை மதிமுக கட்சி சார்பில் 1 மக்களவை மற்றும் 1 மாநிலங்களவை தொகுதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து மதிமுக அவை தலைவர் அர்ஜுன் ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ இந்த முறை மக்களவையில் தேர்தலில் போட்டியிட மதிமுக கட்சி சார்பில் ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை தொகுதிகளை ஒதுக்கும்படி கேட்டுள்ளோம்” என தெரிவித்தார். அப்போது, செய்தியாளர்கள், எந்த சின்னத்தில் மதிமுக கட்சி போட்டியிடும் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், இந்த மக்களவை தேர்தலில், உதயசூரியன் சின்னத்தில் நாங்கள் போட்டியிடமாட்டோம். எங்களுடைய சின்னமான பம்பரம் சின்னத்தில்தான் நாங்கள் போட்டியிடுவோம். அதனையும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவிடம் தெளிவாக தெரிவித்து இருக்கிறோம். அதன்பிறகு ஆலோசித்து இறுதி முடிவை கட்சி தலைமையே எடுக்கும். பேச்சுவார்த்தை மீண்டும் மதியம் தொடரும்” என்று தெரிவித்தார்.