தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 28 ம் தேதி துவங்கி பிப்ரவரி 4 ஆம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேட்புமனு பரிசீலனை ஆனது, பிப்ரவரி 5 ஆம் தேதி காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 2 நகராட்சிகள், குத்தாலம், தரங்கம்பாடி, மணல்மேடு, வைதீஸ்வரன்கோயில் ஆகிய 4 பேரூராட்சிகளில் உள்ள 123 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு போட்டியிட 858 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 



இந்நிலையில், அம்மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. மனுக்கள் சரிவர நிரப்பப்படாதது, கையெழுத்து இல்லாதது, சரியான ஆவணங்கள் இல்லாதது, முன்மொழிவாளர் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், வேட்புமனு பரிசீலனையில் 20 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 838 மனுக்கள் ஏற்கப்பட்டன. 




இந்நிலையில் தேர்தலில் பொதுமக்கள் பாதுகாப்பாக வாக்களிக்கும் வகையில் காவல்துறை கொடி அணிவகுப்பு மயிலாடுதுறையில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் தலைமையில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து துவங்கியது.  காவல் நிலைய சாலை, காந்திஜி சாலை, கச்சேரி சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளின் வழியாக  கொடி அணிவகுப்பு சென்று நகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது. தேர்தலில் பொதுமக்கள் பாதுகாப்பாக வாக்களிக்கவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் நடைபெற்ற இந்த கொடி அணிவகுப்பில் மயிலாடுதுறை உப கோட்டத்தில் உள்ள 7 காவல் நிலையங்களில் இருந்து காவல்துறை அதிகாரிகள் சிறப்பு காவல் படையினர், கமாண்டோ படையினர், காவலர்கள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோர் பங்குபெற்றனர்.



புதியதாக பிரிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் இருபத்தி ஏழு வாக்குசாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என காவல்துறையினர் கண்ணோட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இருபத்தி ஏழு வாக்குச்சாவடிகளிலும் கடந்த முறை தேர்தலில் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளின் அடிப்படையில் தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள வாக்காளர்கள் எவ்வித அச்சமும் இன்றி வாக்களிக்க அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக காவலர்களின் கொடி அணிவகுப்பை நடத்த திட்டமிட்டு பதட்டமான வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் தொடர்ந்து கொடி அணிவகுப்பு நடத்த உள்ளதாகவும், தேர்தல் ஆணையம் விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் தெரிவித்துள்ளார்.